பக்கம் எண் :

122பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்

விதிமுறை பிழையா விளங்கிய சாதியும்
பூச உருவின் பொலந்தெளித் தனையவும்
தீதறு கதிரொளித் தெண்மகட் டுருவவும்
இருள்தெளித் தனையவும் இருவே ருருவவும்
ஒருமைத் தோற்றத் தைவேறு வனப்பின்
இலங்குநீர் விடூஉம் நலங்கெழு மணிகளும்
காற்றினும் மண்ணினும் கல்லினும் நீரினும்
தோற்றிய குற்றம் துகளறத் துணிந்தவும்
சந்திர குருவே அங்கா ரகனென
வந்த நீர்மைய வட்டத் தொகுதியும்
கருப்பத் துளையவும் கல்லிடை முடங்கலும்
திருக்கு நீங்கிய செங்கொடி வல்லியும்"
(14:180-98)

என்னும் சிலப்பதிகாரப் பகுதி, மணிகளின் குணங் குற்றங்களை எடுத்துக் கூறுதல் காண்க.

6. ஓவியம்

   "ஓவியச் செந்நூல் உரைநூற் கிடக்கையும்" (மணிமே. 2:32)
என்பது, ஓவியநூலைத் தெரிவிக்கும்.

   "மாடக்குச் சித்திரமும்" என்னும் நன்னூற் பொதுப்பாயிரத் தொடரும், "சுவரை வைத்துக்கொண்டன்றோ சித்திரமெழுத வேண்டும்?" என்னும் பழமொழியும், மாடச்சுவர்களிலெல்லாம் அக்காலத்தில் ஓவியம் வரையப் பெற்றிருந்தமையை அறிவிக்கும்.

"வம்ப மாக்கள் கம்பலை மூதூர்ச்
சுடுமண் ஓங்கிய நெடுநிலை மனைதொறும்
மையறு படிவத்து வானவர் முதலா
எவ்வகை உயிர்களும் உவமம் காட்டி
வெண்சுதை விளக்கத்து வித்தகர் இயற்றிய
கண்கவர் ஓவியம் கண்டுநிற் குநரும்"
(3:126-31)

என்று மணிமேகலை கூறுதல் காண்க.

   ஒருவன் ஓர் அரசனது அவைக்களம் சென்று அங்கு அரசன் தன் அமைச்சருடன்அமர்ந்திருந்ததைக் கண்டு, தான் கொண்டுவந்த காணிக்கையை நீட்ட அரசன் அதை வாங்காமையால் நெருங்கிச் சென்று அது ஓர் ஓவியமாயிருக்கக் கண்டானென்று, ஒரு கதை வழங்கிவருகின்றது. அத்தகைய ஓவியத்திறவோர் அக்காலத்திருந்தனர்.

   ஓவியக்காரரைக் கண்ணுள் வினைஞர் என்று சிலப்பதி காரம் கூறும் (5:30). ஆடை அணிகலம் கட்டடம் முதலிய எல்லாப் பொருளும் ஓவிய வேலைப்படுள்ளனவா யிருந்தன.