பக்கம் எண் :

124பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்

என்னும் சொற்போல் தலைநகர் முழுவதையும் குறித்து, நாளடை வில் நகரப் பொதுப்பெயராயிற்று.

   அரண்மனையிலுள்ள புரம் அரசன் இருக்கையாதலால், கோபுரம் எனப்பட்டது. கோ அரசன். கோ இருந்த இல் கோயில் எனப்பட்டதை நோக்குக.

   பகைவர் வரவு காண்டற்குக் கோபுரம் சிறந்த அமைப்பென்று கண்டபின், நகரைச் சூழ்ந்த கோட்டை மதிலிலும், வாயிலிற் பெரி தாகவும் மற்ற இடங்களிற் சிறியனவாகவும் கோபுரங்கள் கட்டப் பட்டன. சிறியன கொத்தளம் எனப்பட்டன.

   மதுரைநகரைச் சூழ்ந்த மதிலின் நாற்புறத்திலும், வாயிலும் மாடமும் வானளாவிய கோபுரமும் இருந்தன. நான்கு வாயில் மாடங்கள் இருந்ததினால், மதுரை நான்மாடக் கூடல் எனப் பட்டது. கூடல் என்பது தமிழ்க் கழகம். அது பின்பு இடவாகு பெயராய் மதுரையைக் குறித்தது. இதையறியாது, தொல்கதைஞர் (புராணிகர்) ஒரு கதையைக் கட்டிவிட்டனர்.


"தமிழ்கெழு கூடல் தண்கோல் வேந்தே" (புறம்.58:13)
"தமிழ்நிலை பெடற்ற தாங்கரு மரபின்
மகிழ்நனை மறுகின் மதுரை"
(சிறுபாண்.66-7)


   இனி, கூடல்நகர் என்பது நாளடைவில் கூடல் எனக் குறு கிற்று எனினுமாம்.
மதுரைநகர்வாயில், இடைவிடாது ஒழுகிய வைகையாறு போல் அகன்றும், இடையறாத மக்கள் போக்குவரத்து மிகுந்தும், இருந்தது.

"மழையாடு மலையின் நிவந்த மாடமொடு
வையை யன்ன வழக்குடை வாயில்"
(355-6)

என்று மதுரைக்காஞ்சி கூறுதல் காண்க.

   "கோபுர மன்றி வாசலை மாடமாகவுஞ் சமைத்தலின், மாட மென்றார்." என்னும் நச்சினார்க்கினியர் சிறப்புரை இங்குக் கவனிக் கத்தக்கது.

   அரசனுக்குரிய சிறப்புகளெல்லாம் இறைவனுக்கும் செய்யப் பெற்றதினால், கோயில்தேர் மிகப் பெரிதாய்ச் செய்யப்பெற்றது போல், கோயில் மதிற்கோபுரமும் மிகப் பெரிய எழுநிலை வானளா வியாகக் கட்டப்பெற்றது. அதன் அமைப்பும் தேரை ஒத்ததாகும். அதன் எழுநிலைகளும் தேரின் எழுதட்டுகளைப் போன்றவை. எழுநிலை அல்லது எழுதட்டுக் கருத்து ஏழுலகம் என்னும் கருத்தி னின்று