பக்கம் எண் :

பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்125

தோன்றியது. ஏழுலகக் கருத்தும் எழுதீவுக் கருத்தினின்று தோன்றியதாகும்.

"ஏழுடை யான்பொழில்" (திருக்கோ. 7)

   தச்சுக் கலையில் கோயில்தேர்போல், கட்டடக் கலையில் கோயிற்கோபுரம் பண்டைத் தமிழரின் அறிவையும் ஆற்றலையும் சிறப்பக் காட்டும். தஞ்சைப் பெருவுடையார் கோயிற் கோபுரத்திற்கு, 10 கல் தொலைவிலுள்ள சாரப்பள்ளம் என்னும் இடத்திலிருந்து சாரம் கட்டியதாகவும், கடைகாலில் ஒழுகிய நீர்த்துளைகளை அடைத்தற்குக் குறவை மீன்களைப் பிடித்துவிட்டதாகவும், கூறுவர்.

"தண்புனல் பரந்த பூசல் மண்மறுத்து
மீனீற் செறுக்கும் யாணர்ப்
பயன்திகழ் வைப்பிற்பிறர் அகன்றலை நாடே
" (புறம். 7)

என்பது தஞ்சை நிகழ்ச்சியை ஒருவாறு நினைவுறுத்தும்.

மணி = 1. ஒளிக்கல், 2. நீல ஒளிக்கல்.

   இவ் விரு பொருள்களுள். முதலாவது மண்ணுதல் என்னும் வினையினின்றும், இரண்டாவது மள்குதல் என்னும் வினையி னின்றும், தோன்றியவை யாகும். அழகு என்பது இவ் விரண்டி னின்றும் தோன்றிய வழிப்பொருள்.

மண்ணுதல் கழுவுதல். மண்ணப்பட்டது மண்ணி. மண்ணி - மணி.

"மண்ணி யறிப மணிநலம்" (நான்மணி. 5)
"மண்ணுறு மணியும்" (பெருங்.2-5: 123)
மள்குதல் = கருத்தல், ஒளி மழுங்குதல். மள்கு - மட்கு - மக்கு.
மள் - (மய்) - மை = கருமை, கருமுகில், கரிய ஆடு.
ஒ.நோ: வள்(கூர்மை) - (வய்)-வை = கூர்மை.
மல் - மால் = கருமை, கருமுகில், கரிய திருமால்.
மால் - மாரி = மழை. மா - மாயோன் = கரியோன்.
மால் - மாரி = மழை, முகில்.
மள் - மழை = மாரி, முகில்.

   மள் - மண் - மணி = கரிய(நீல) ஒளிக்கல். கருமையும் நீலமும் ஒன்றாய்க் கொள்ளப்படுவதைக் காளி, நீலி; காளகண்டன், நீலகண்டன்; கார்வண்ணன், நீலவண்ணன்; கருநாகம், நீலநாகம் முதலிய சொல்லிணைகளால் அறிக.

   மண்டுதல் = நெருங்குதல், கூடுதல், மிகுதல், நிறைதல். மண்டு - மண்டி = பொருள்கள் நிறைந்து கிடக்கும் சரக்கு நிலையம்.