பக்கம் எண் :

126பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்

மண்டு - மண்டகம் = மக்கள் கூடும் மடம் அல்லது அம்பலம்.

மண்டகம் - மண்டபம் - மண்டப(வ.)

ஒ.நோ: வாணிகம் - வாணிபம்.

இன்றும் மண்டகம், மண்டகப்படி என்பதே உலக வழக்கு.

   மண்டபங்களுள் நூற்றுக்கால் மண்டபங்களும் ஆயிரக்கால் மண்டபங்களும் இருந்தன.

   மாடங்களின் முகப்பில் புலியுருவம் அமைக்கப்பட்டும், புலித்தொடர் என்னும் சங்கிலி தொங்கவிடப்பட்டும், இருந்தன.

"புலிமுக மாட மலிர வேறி" (பெருங். இலாவாண. 9: 69)
"புலித்தொடர் விட்ட புனைமாண் நல்லில்" (முல்லைப்.62)

   மாடங்கள் மதுரையில் மிகுந்தும் சிறந்தும் இருந்ததாகத் தெரிகின்றது.

   "மாட மதுரை" (புறம்;32), "மாடமலி மறுகிற் கூடல்" (திருமுருகு.71), "மாடம் பிறங்கிய மலிபுகழ்க் கூடல்" (மதுரைக்.429) "நான் மாடக் கூடல் மகளிரும் மைந்தரும்" (கலித்.92, "மதிமலி புரிசை மாடக் கூடல்" (திருமுகப் பரசுரம்).

   கோநகர்களில் அங்கண நீரைக் கண்ணிற் படாமற் செலுத்து தற்கு, கரந்துபடை என்னும் புதைசாலகம் இருந்தது. அது தெரு நடுவிற் கட்டப்பட்டு யானைக் கூட்டம் மேற்செல்லும்படி, கருங் கல்லால் மூடப்பட்டிருந்தது. அதிற் சென்ற நீர், யானைத் துதிக்கை போன்ற தூம்பின் வாயிலாய் அகழியில் விழுந்தது.

"பெருங்கை யானை யினநிரை பெயரும்
சுருங்கை வீதி"
(சிலப். 14:64-5)

   கோநகர்களில், ஊரைச் சுற்றிக் கோட்டை மதில் இருந்தது. அது புரிசை எனப்பட்டது. புரிதல் வளைதல். புரிசையுள்ள நகர்ப் பெயர்களே முதலில் புரி என்னும் ஈறு பெற்றன. கோட்டை என் பதும் வளைதற் பொருளதே. கோடுதல் வளைதல்.

"உயர்வகலம் திண்மை அருமை இந்நான்கின்
அமைவரண் என்றுரைக்கும் நூல்".
(743)

என்னும் திருக்குறட்கேற்ப, மதிலரண் மதில், எயில், இஞ்சி, சோ என நால்வகைப்பட்டிருந்தது.

   மிக உயரமானது மதில்; ஞாயில் என்னும் ஏவறைகளை யுடையது எயில்; செம்பையுருக்கிச் சாந்தாக வார்த்துக் கருங்கல்லாற் கட்டியது இஞ்சி; அரிய பொறிகளை யுடையது சோ.