கணக் கிடப்பட்டிருந்தது. ஒரு நாளை ஆறு சிறுபொழுதாகப் பிரித்தது போன்று, ஓர் ஆண்டை ஆறு பெரும்பொழுதாகப் பிரித்திருந்தனர். ஒரு கோநகர்த் தோற்றம் அல்லது ஒரு பேரரசன் பிறப்புப் போன்ற நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு, தொடராண்டு கணித்து வந்ததாகத் தெரிகின்றது. "செஞ்ஞா யிற்றுச் செலவும்அஞ் ஞாயிற்றுப் பரிப்பும் பரிப்புச் சூழ்ந்தமண் டிலமும் வளிதிரிதரு திசையும் வறிது நிலைஇய காயமும் என்றிவை சென்றளந் தறிந்தோர் போல என்றும் இனைத்தென் போரும் உளரே" (புறம்.30) என்னும் உறையூர் முதுகண்ணன் சாத்தனார் கூற்றும்,"மாக விசும்பு" (புறம்.35, அகம். 253, மதுரைக்.454, பரிபா1) என்னும் வழக்கும், "மாகமாவது பூமிக்கும் சுவர்க்கத்துக்கும் நடுவு" என்னும் பரிமேலழகர் உரையும், "இன்னிசை யெழிலியை இரப்பவும் இயைவதோ" "வளிதரும் செல்வனை வாழ்த்தவும் இயைவதோ?" (கலித்.15) என்னும் பாலைபாடிய பெருங்கடுங்கோவின் பாட்டடிகளும், கவனிக்கத் தக்கன. மழைக்கும் காற்றிற்கும் கதிரவன் கரணியம் என்பதை முன்னைத் தமிழர் கண்டிருந்தனர். எழிலி முகில். எழிலியைத் தோற்றுவிக்கும் கதிரவனை எழிலி என்றது இலக்கணையென்னும் ஆகு பெயர்ப் போலி. (10) கணியம் (Astrology) ஒருவர் பிறந்த நாளையும் வானத்திலுள்ள நாள்கோள் நிலை யையும் அடிப்படையாக வைத்து, அவருக்கு, வரும் இன்பதுன்பங் களை முற்படக் கணித்துக் கூறுவது கணியம். வாழ்நாள் முழுவதற் கும் வரையப்படும் கணியமே பிறப்பியம் (ஜாதகம்). கோச்சேரமான் யானைக்கட் சேய் மாந்தரஞ்சேரலிரும் பொறை இன்னநாள் இறப்பான் என்று, கூடலூர்கிழார் ஒரு விண்வீழ் கொள்ளியைக் கண்டு கணித்தறிந்த செய்தியை 229ஆம் புறப்பாட்டுக் கூறும். நல்ல நாளும் வேளையும் பார்த்து வினை களைத் தொடங்குவது, பண்டைநாளிற் பெருவழக்கமா யிருந்தது. நாளேரடித்தல், குடைநாட்கோள், வாள்நாட்கோள் என்பன இதைத் தெரிவிக்கும். |