| நிகழ்ச்சிகளான நற்குறி தீக்குறிகளும் பிறவும் புள்நூலின்பாற்படு வனவே. (14) கனாநூல் இன்ன யாமத்தில் இன்ன பொருள் அல்லது நிகழ்ச்சி காணின், இவ்வளவு காலத்தில் இன்னது நேரும் என்று கூறும் நூல் கனா நூலாம். மதுரைத் தமிழ்ச் சங்கம் வெளியிட்ட ஒரு கனா நூல் இன்றும் உளது. (15) உளநூல் (Psychology) தனிப்பட்டவரும் தொகுதியாளருமான மக்களின் உளப் பாங்குகளை எடுத்துக்கூறுவது உளநூல். இது தொல்காப்பிய மெய்ப்பாட்டியலால் அறியப்படும். எண்சுவைகளையும் அவற்றின் நுண்ணிய வேறுபாடுகளையும், முதன்முதல் எடுத்துக் கூறியது தமிழிலக்கணமே. (16) பூதநூல் நிலம் நீர் தீ வளி வெளி என்னும் ஐம்பூதங்களின் இயல்பு களைக் கூறும் நூல் பூதநூல். "கருவளர் வானத் திசையின் தோன்றி உருவறி வாரா ஒன்றன் ஊழியும் உந்துவளி கிளர்ந்த ஊழுழ் ஊழியும் செந்தீச் சுடரிய ஊழியும் பனியொடு தண்பெயல் தலைஇய ஊழியும் அவையிற்று உண்முறை வெள்ளம் மூழ்கி யார்தருபு மீண்டும் பீடுயர் பீண்டி அவற்றிற்கும் உள்ளீ டாகிய இருநிலத் தூழியும்" (பரிபா. 2 : 5-12) "கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து" (பு.வெ. 35) "மழைமாறிய வியன்ஞாலத்து" (மதுரைக். 4) "நிலந்தீ நீர்வளி விசும்போ டைந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின்" (தொல். மரபு. 90) "வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும்." (குறள். 271) இவை ஐம்பூதங்களைப் பற்றிப் பண்டையத் தமிழர்க்கிருந்த அறிவைப் புலப்படுத்தும். |