பக்கம் எண் :

பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்149

(17) நிலநூல்

   நிலத்தின் வகைகளையும் நிலப்படை வகைகளையும் மண்ணின் வகைகளையும் எடுத்துக் கூறுவது நிலநூல்.

(18) நீர்நூல்

   
கிணறு தோன்றுவதற்கு நீரிருக்கும் இடங்களைத் தெரிவிப்பது நீர் நூல். இது கூவநூல் எனவும்படும்.

(19) புதையல்நூல்

   
புதையல் இருக்குமிடங்களை அறியச் செய்வது புதையல்நூல்.

(20) கோழிநூல்

   
இது போர்ச் சேவற்கோழிகளின் நிறங்களையும் திறங்களை யும் எடுத்துக் கூறுவது.

(21) பரிநூல்

   
இது பல்வகைக் குதிரைகளையும் பற்றிய செய்திகளையெல் லாம் விளக்கிக் கூறுவது.

(22) யானைநூல்

   இது யானையைப்பற்றிய செய்திகளையெல்லாம் விரிவாகக் கூறுவது.

(23) வரலாற்று நூல்

   
முக்கழக வரலாற்றில் பாண்டியர் தொகை குறிக்கப்பட்டிருந் தாலும், அன்றாட நடவடிக்கைகளைப் பட்டோலைப் பெருமான் எழுதிவந்ததாலும், பரணி என்னும் வாகைப் பனுவல்களில் அரச வழிமரபு கூறப்படுவதாலும், வரலாற்று நூல் ஒருவகையில் எழுதப்பட்டு வந்தமை உய்த்துணரப்படும். மூவேந்தர் குடி வரலாற்று நூல்களும் அவர் வரலாற்றுக் கருவி நூல்களும் இறந்து பட்டன.

"ஏரணம் உருவம் யோகம் இசைகணக் கிரதம் சாலம்
தாரணம் மறமே சந்தம் தம்பம்நீர் நிலம்உ லோகம்
மாரணம் பொருள்என் றின்ன மானநூல் யாவும் வாரி
வாரணம் கொண்ட தந்தோ வழிவழிப் பெயரும் மாள"

என்பது, இறந்துபட்ட தமிழ்க்கலை நூல் வகைகளிற் சிலவற்றை எடுத்துக் கூறும் தனிப்பாவினம். பிற்காலச் செய்யுளாத லால், சில கலைநூல்கள் வடசொற் பெயரால் குறிக்கப்பட்டுள்ளன.