ஒக்கும்.
(26) பொழுதுபோக்கு
பண்டைத் தமிழ் மக்கள் ஒழிவு நேரத்தையும் ஓய்வு நாள்களையும் பின்வருமாறு கழித்து வந்தனர்.
சிறுவர்: கோலியடித்தல், தெல் தெறித்தல், கிளித்தட்டு, சடுகுடு, கில்லித் தாண்டு, பாண்டி (சில்லாக்கு), முதலிய விளையாட் டாடல், காற்றாடி விடுதல், மரமேறுதல், நீருள் மூழ்கி விளையாடல் முதலியன.
இளைஞர்: சடுகுடு, கிளித்தட்டு முதலிய விளையாட்டாடல், மற்பயிற்சி, இளவட்டக்கல் தூக்கல், கழியலடித்தல், வேட்டை யாடல், ஏறு கோள் (சல்லிக்கட்டு) முதலியன.
முதியோர்: சேவற்போர், கடாப்போர், கதுவாலிப்போர், காடைப்போர், புறாப்போட்டி முதலியன காணல், வேட்டை யாடல்,தூண்டில் போடுதல், பணையம் வைத்தும் வையாதும் தாயமாடுதல் முதலியன.
சிறுமியர்: வீடுகட்டி விளையாடல், கும்மியடித்தல், பூப்பறித் தல், கழங் காடல், தெள்ளேணம் கொட்டல், அம்மானையாடல் முதலியன.
பெண்டிர் : கிளி வளர்த்தல், பூவை (நாகணம்) வளர்த்தல், புறா வளர்த்தல், மான் வளர்த்தல், மாலை தொடுத்தல், தாயமாடுதல், குரவையாடல் முதலியன.
அரசர் : குதிரைப் பந்தயம், தேர்ப்பந்தயம், யானைப்போர், சாக்கைக் கூத்து முதலியன காணல்; யாழ்ப்போர், இசைப்போர், ஆடற்போர், செய்யுட் போட்டி, பட்டிமன்றம், பல்கவன அரங்கு, நூலரங்கேற்றம் முதலிய நடப்பித்தல்; வேட்டையாடல், பணையம் வைத்துத் தாயமாடல், உரிமைச் சுற்றத்துடன் இலவந்திகைச் சோலையில் விளையாடல் முதலியன.
ஊரார் : திருவிழாக் கொண்டாடல், நாடகம் நடிப்பித்தல், ஏறுகோள் நடத்துதல் முதலியன. ஏறுகோள் இன்று சல்லிக்கட்டு என்றும் மஞ்சு வெருட்டு என்றும் மாடுபிடி சண்டை என்றும் சொல்லப் பெறும்.
நகரத்தார் : வேந்தன் (இந்திர) விழாக் கொண்டாடல், புதுப்புனலாடல் முதலியன. வேந்தன் விழாவைக் கொண்டாடும் போது பிற தெய்வங்கட்கும் பூசைகள் நடத்தினர்.