பக்கம் எண் :

பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்159

சேற்றொடு பட்ட சிறுமைத் தாயினும்
உண்ணீர் மருங்கின் அதர்பல வாகும்
புள்ளும் பொழுதும் பழித்த லல்லதை
உன்னிச் சென்றோர்ப் பழியிலர் அதனால்
புலவேன் வாழியர் ஓரி விசும்பின்
கருவி வானம் போல
வரையாது சுரக்கும் வள்ளியோர் நின்னே."
(புறம்.204)

இது, "இரத்தல் இழிவானது; ஈயாமை அதனினும் இழிவா னது; கொடுத்தல் உயர்ந்தது; கொடுத்ததை வாங்காமை அதனினும் உயர்ந்தது. தண்ணீர் குடிக்க விரும்பியவர் பெரிய கடலுக்குச் செல்லார்; சிறிய ஊற்றிற்கே செல்வர். நீ ஒரு குறுநில மன்னனாயிருந்தாலும் கொடையாளி என்று வந்தேன். நீ கொடா விட்டாலும் நான் உன்னை வெறுக்க மாட்டேன். அது நான் புறப்பட்டு வந்த வேளையின் குற்றமேயன்றி உன் குற்றமன்று," என்று கழைதின் யானையார் வல்வில் ஓரியிடம் கூறியது.

"முற்றிய திருவின் மூவ ராயினும்
பெட்பின் றீதல் யாம்வேண் டலமே"
(புறம்.205 : 1-2)

இது,"நிறைந்த செல்வத்தையுடைய மூவேந்தர் தரினும் எம்மிடம் ஆர்வமின்றித் தருவதை யாம் விரும்ப வில்லை" என்று பெருந்தலைச்சாத்தனார் கடிய நெடுவேட்டுவனிடம் கூறியது.

"குன்றும் மலையும் பலபின் னொழிய
வந்தனென் பரிசில் கொண்டனென் செலற்கென
நின்ற என்நயந் தருளி ஈதுகொண்
டீங்கனஞ் செல்க தானென என்னை
யாங்கறிந் தனனோ தாங்கருங் காவலன்
காணா தீத்த இப்பொருட் கியானோர்
வாணிகப் பரிசிலன் அல்லேன் பேணித்
தினையனைத் தாயினும் இனிதவர்
துணையள வறிந்து நல்கினர் விடினே."
(புறம். 208)

   இது, பெருஞ்சித்திரனார் அதிகமான் நெடு மானஞ்சியிடம் பரிசில்பெறச் சென்றபோது, அவன் அவரைக் காணாமலே பரிசு கொடுத்தனுப்ப, அவர் அதை வாங்காது,

   "பல குன்றுகளையும் மலைகளையும் கடந்து பரிசில் பெற வந்த என்மீது அன்புகொண்டு இப் பொருளைக் கொண்டு இப்படிச் செல்க என்று சொல்வதற்கு, அவன் என்னை எப்படி அறிந்தான்? என்னைக் காணாமற் கொடுத்த இப் பரிசிலைப் பெறுவதற்கு நான் ஒரு வணிகப் பரிசிலன் அல்லேன். தினையளவாயினும் என் தகுதி யறிந்து மதித்துக் கொடுத்தால் நான் பெறுவேன்" என்று கூறியது.