பக்கம் எண் :

162பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்

   எழுபெரு வள்ளல்களுள் ஒருவனாகிய வையாவிக் கோப் பெரும் பேகன் தன் தேவியாகிய கண்ணகியைத் தள்ளிவிட்ட பின், அவள்பொருட்டுக் கபிலர், பரணர், அரிசில்கிழார், பெருங்குன்றூர் கிழார் என்னும் புலவர் நால்வர்,கல்லுங் கரையக் கனிந்து பாடி யுள்ளனர் (புறம். 143-7).

   குடபுலவியனார் என்னும் புலவர் பாண்டியன் நெடுஞ்செழி யனிடம் சென்று,

"மல்லல் முதூர் வயவேந்தே
செல்லும் உலகத்துச் செல்வம் வேண்டினும்
ஞாலங் காவலர் தோள்வலி முருக்கி
ஒருநீ யாகல் வேண்டினும் சிறந்த
நல்லிசை நிறுத்தல் வேண்டினும் மற்றதன்
தகுதி கேள்இனி மிகுதி யாள
நீரின் றமையா யாக்கைக் கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே
உண்டி முதற்றே உணவின் பிண்டம்
உணவெனப் படுவது நிலத்தொடு நீரே
நீரும் நிலனும் புணரி யோர்ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசி னோரே
வித்திவான் நோக்கும் புன்பலம் கண்ணகன்
வைப்பிற் றாயினும் நண்ணி ஆளும்
இறைவன் தாட்குத வாதே அதனால்
அடுபோர்ச் செழிய இகழாது வல்லே
நிலன்நெளி மருங்கின் நீர்நிலை பெருகத்
தட்டோர் அம்ம இவண்தட் டோரே
தள்ளா தோர்இவண் தள்ளா தோரே’’
(புறம்.18)

என்று, ஓர் உணவுப் பெருக்கத் திட்டத்தை விளக்கிக் காட்டினார்.

   இதன் பொருள்: "வளமுள்ள பழமையான ஊரையுடைய வலியவேந்தே! நீ மறுமையிற் செல்லக்கூடிய உலகத்தில் நுகரும் (அனுபவிக்கும்) செல்வத்தை விரும்பினாலும், உலக அரசரின் தோள் வலிமையைக் கெடுத்து நீ ஒருவனே தலைவனாக விரும்பினாலும், மிகுந்த நல்ல புகழை இவ் வுலகத்தில் நிறுத்த விரும்பினாலும், அதற்குத் தக்க செயலை இப்போது கேட்பாயாக. பெரியோனே! நீரையின்றி யமையாத உடம்பிற் கெல்லாம் உணவு கொடுத்தவர் உயிர் கொடுத்தவ ராவர். உணவை முதற் கருவியாகவுடையது அவ்வுணவால் உள்ளதாகும் உடம்பு. ஆதலால், உணவென்று சொல்லப்படுவது நிலத்தோடு கூடிய நீர்.அந் நீரையும் நிலத்தையும் ஒருவழிச் சேர்த்தவர் இவ் வுலகத்தில் உடம்பையும் உயிரையும் படைத்தவ ராவர்.