பக்கம் எண் :

பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்163

நெல் முதலியவற்றை விதைத்து மழையை எதிர்பார்க்கும் நீர்வளமற்ற நிலம் இடமகன்ற பரப்புள்ளதாயினும், பொருந்தி யாளும் அரசனது முயற்சிக்கும் பயன்படாது. ஆதலால், கொல்லும் போரைச் செய்யும் பாண்டியனே! இதை இகழாமல் விரைந்து நிலங்குழிந்த விடங்களில் நீர் பெருகத் தேக்கினோர், தாம் செல்லும் உலகத்துச் செல்வம் முதலிய மூன்றையும் இவ் வுலகத்துத் தேக்கி னோராவர். அந் நீரைத் தேக்காதோர்அவற்றையும் தேக்கா தோரே யாவர்." என்பது.
 

3. அரசர் பண்பாடு

   பண்டைத் தமிழரசர் தம்மை ஆளும் தலைவர் எனக் கருதாது, காக்கும் தந்தையர் போன்றே கருதினர். அதனால் காவலர் என்றும் புலவலர் என்றும் பெயர் பெற்றார்.
அரசனாலும் அரசியலதிகாரிகளாலும் பகைவராலும் கள்வர் கொள்ளைக்காரராலும், காட்டுவிலங்காலும் நேரக்கூடிய, ஐவகைத் துன்பமாகிய வெயிலினின்றும் குடிகளைக் காத்து, இன்பமாகிய நிழலைத் தருபவன் என்னும் கருத்திலேயே, குடை அரசச் சின்னங் களுள் ஒன்றாகக் கொள்ளப்பட்டது.

"ஞாயிறு சுமந்த கோடுதிரள் கொண்மூ
மாக விசும்பின் நடுவுநின் றாங்குக்
கண்பொர விளங்கும்நின் விண்பொரு வியன்குடை
வெயில்மறைக் கொண்டன்றோ அன்றே வருந்திய
குடிமறைப் பதுவே கூர்வேல் வளவ"
(புறம். 35)

என்று, வெள்ளைக்குடி நாகனார் பாடுதல் காண்க. வெண்மதி போன்ற தண்மையையும் குற்றமற்ற தூய்மையையும் குறிக்க, அரசன் குடை வெண்பட்டினாற் செய்யப்பட்டு வெண் கொற்றக் குடை எனப் பட்டது. கொற்றம் வெற்றி. அரசாட்சி நிழல் என்றும், அரசாட்சிக் குட்பட்ட நாடு குடைநிழல் என்றும் பெயர் பெற்றன.

"உறுதுப் பஞ்சா துடல்சினம் செருக்கிச்
சிறுசொற் சொல்லிய சினங்கெழு வேந்தரை
அருஞ்சமம் சிதையத் தாக்கி முரசமொடு
ஒருங்ககப் படேஎ னாயின் பொருந்திய
என்நிழல் வாழ்நர் செல்நிழல் காணாது
கொடியன்எம் இறையெனக் கண்ணீர் பரப்பிக்
குடிபழி தூற்றம் கோலேன் ஆகுக"
(புறம்.72)

என்பது, பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் வஞ்சினம்.