"பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர் அலகுடை நீழ லவர்." (குறள். 1034) என்றார் திருவள்ளுவர். ஆட்சி நேர்மையாயிருக்க வேண்டும் என்பதை உணர்த்த அரசன் கையில் ஒரு செங்கோல் இருந்தது. செங்கோல் நேரான கோல். குடிகளைத் துன்புறுத்திய ஒருசிலர் செங்கோல் பிடிப்பினும், கொடுங்கோலர் எனப் பழிக்கப்பட்டார். அரசன் முறை (நீதி) தவறி ஆண்டால் அவன் நாட்டில் மழை பெய்யாதென்றும், அரசனும் குடிகளும் உயிரும் உடம்பும் போல நெருங்கிய தொடர்புடையவ ரென்றும், இரு கருத்துகள் அக்காலத்து மக்கள் உள்ளத்தில் வேரூன்றி யிருந்தன. "இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட பெயலும் விளையுளும் தொக்கு." (குறள். 545) "முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி ஒல்லாது வானம் பெயல்." (குறள்.559) "கோல்நிலை திரிந்திடின் கோள்நிலை திரியும் கோள்நிலை திரிந்திடின் மாரிவறங் கூரும் மாரிவறங் கூரின் மன்னுயிர் இல்லை மன்னுயிர் எல்லாம் மண்ணாள் வேந்தன் தன்னுயிர் என்னும் தகுதியின் றாகும்." (மணிமே. 7:8-12) "மழைவளம் கரப்பின் வான்பே ரச்சம் பிழைஉயிர் எய்தின் பெரும்பே ரச்சம் குடிபுர வுண்டும் கொடுங்கோல் அஞ்சி மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல் துன்ப மல்லது தொழுதக வில்." (சிலப். 215 100-9) "மாரி பொய்ப்பினும் வாரி குன்றினும் இயற்கை யல்லன செயற்கையில் தோன்றினும் காவலர்ப் பழிக்கும்இக் கண்ணகன் ஞாலம்" (புறம்.35) அரசர் குடிகளிடத்து அன்பு கொண்டிருந்ததனால், காட்சிக் கெளியராயும் கடுஞ்சொல்லர் அல்லராயும் இருந்தனர். இது கண்ணகி வழக்காட்டினின்று நன்கு புலனாகின்றது. செங்கோல் அரசர் தம் ஆட்சியும் உயிரும் இழக்கினும், வாய்ச்சொல் தவறுவதில்லை யென்பது, மாவலி என்னும் சேரமாவேந்தன் செய்தியினின்று அறியலாம். நடுநிலையாகக் குடிகளின் வழக்குத் தீர்த்து முறைவழங்கும் பொருட்டு, வழக்குகளின் உண்மை காண்பதற்கு, |