பக்கம் எண் :

166பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்

   பல்வேறு சமயக் குரவர் தத்தம் சமயமே உண்மையென்று மக்களை மயக்கி வந்ததால், அவற்றின் உண்மை காண்பதற்கு அரசர் பட்டிமண்டபம் என்னும் தருக்க மண்டபத்தை அமைத்து, எல்லாச் சமய ஆசிரியரையும் அதில் ஏறித் தத்தம் சமய உண்மையை நாட்ட ஏற்பாடு செய்திருந்தனர்.

"ஒட்டிய சமயத் துறுபொருள் வாதிகள்
பட்டிமண் டபத்துப் பாங்கறிந் தேறுமின்"
(மணிமே. 16:1)

என்று, காவிரிப்பூம்பட்டினத்தில் வேந்தன் (இந்திர) விழாவை அரசன் ஏவலாற்பறையறைந்தறிவித்த வள்ளுவன் கூறினமை காண்க.

   போர்வினையில் முதலிலிருந்து முடிவுவரை பல்வேறு அறங்கள் கடைப்பிடிக்கப்பட்டன. வேற்று நாட்டைக் கொடுங் கோல் அரசர் ஆட்சியினின்று விடுவிக்கச் செய்யும் அறப்போரா யினும், மண்ணாசையாற் பிற நாட்டின்மேற் படையெடுத்துச் சென்று தாக்கும் மறப்போராயினும், வேற்று நாட்டு முல்லை நிலத்தி லுள்ளனவும் தீங்கற்றனவும் தீங்கு செய்யத் தாகதனவுமான ஆவின் மந்தைகளை, போரிற் சேதமுறாதபடி தப்புவித்தற்கு, போர்தொடங் கும் அரசன் தன் படையை ஏவிக் களவாகக் கவர்ந்து கொண்டுவரச் செய்து காப்பது வழக்கம். இது பொருளிலக்கணத்தில் புறப்பொருட் பகுதியில் வெட்சித்திணை யெனப்படும்.

"வேந்துவிடு முனைஞர் வேற்றுப்புலக் களவின்
ஆதந் தோம்பல் மேவற் றாகும்"
(புறத். 2)

என்று தொல்காப்பியம் வெட்சித் திணையிலக்கணம் கூறுதல் காண்க. "நோயின் றுய்த்தல்" (ஆக்களைச் சேதமின்றி ஓட்டிக் கொண்டு வரல் என்னும் வெட்சித் துறையும் இதை வலியுறுத்தும்). பாதீடு என்னும் துறை, படைத்தலைவன் கட்டளைப்படி மறவர் ஆக்களைத் தமக்குட் பகுத்துக் காத்தலைக் குறிக்கும். பாதுகாத்தல் என்னும் சொல் இதினின்றே தோன்றிற்று. பாது பங்கு.

   குறித்த இடத்தில் போர் தொடங்குமுன், அக்கம்பக்கத்துள்ள தனிப்பட்ட ஆக்களையும் ஆவைப்போல் அமைந்த இயல்புள்ள அறிஞரையும், பெண்டிரையும் நோயாளிகளையும் பிள்ளை பெறாத மகளிரையும், அவ் விடத்தை விட்டகன்று பாதுகாப்பான இடத்திற் சேர்ந்துகொள்ளுமாறு முன்னறிவிப்பது மரபு.

"ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்
தென்புல வாழ்நர்க் கருங்கடன் இறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்
எம்அம்பு கடிவிடுதும் நும்அரண் சேர்மின்என
அறத்தாறு நுவலும் பூட்கை மறத்தின்"
(புறம். 9)