| என்று புறநானூற்றுச் செய்யுள் கூறுதல் காண்க. பார்ப்பார் என்பது, ஆரியர் வருமுன் தமிழப் பார்ப்பனரையும், அவர் வந்தபின் பிராம ணரையும், குறித்தது. எளிய படைக்கலமுள்ளவன், கீழே விழுந்தவன், முடிகுலைந் தவன், தோற்றோடுகின்றவன் ஆகியோர்மீது படைக்கலத்தை ஏவா மையும், இரவில் போரை நிறுத்துதலும், பாசறை புகுந்து பகை வரைத் தாக்காமையும், தோற்ற அரசனைக் கொல்லாது திறை செலுத்தச் செய்தலும், இயலுமாயின் அவனொடு மணவுறவு கொள்ளுதலும், பிற போரறங்களாம். அக்காலத்திற் படைத்தலைவர் போன்றே அரசரும் போர்க்குச் சென்றனர். இது அவர் பொறுப்புணர்ச்சியையும் மறத்தையும் காட்டும். போரில் முதுகிற் புண்பட்டபோதும், வாழ்க்கையில் தன் மானங்கெட ஏதேனும் நேர்ந்த போதும், அரசர் வடக்கு நோக்கி உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்தனர். இது வடக்கிருத்தல் எனப்படும். சேரமான் பெருஞ்சேரலாதன் சோழன் கரிகாற் பெருவளத்தானொடு பொருதுபட்ட புறப்புண் நாணியும், கோப்பெருஞ் சோழன் தன் மக்கள் தன்னொடு பொரவந்த நிகழ்ச்சிபற்றிய அகப்புண்ணா லும் வடக்கிருந்தனர். சேரமான் கணைக்கா லிரும்பொறை சோழன் செங்கணா னோடு பொருது சிறைப்பட்டிருந்தபோது, தண்ணீர் கேட்டுக் காலந் தாழ்த்துப் பெற்றதினாற் பருகாது இறந்தான். அக்காலத்தரசர் சிறந்த புலவராயும் பாவலராயும் இருந்தனர். ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், பூதப் பாண்டியன், சேரமான் கணைக்கா லிரும்பொறை, பாலைபாடிய பெருங்கடுங்கோ முதலியோர் பாடியுள்ளவை சிறந்த பாமணிகளாகும். சேரமான் தகடூரெறிந்த பெருஞ்சேர லிரும்பொறை, முரசுகட்டிலின்மேல் அறியாது ஏறித் துயின்ற மோசிகீரனார்க்கு, அவர் எழுமளவும் கவரி வீசியதும் பண்பாட்டுச் செயலே. முத்தமிழ் வேந்தருள்ளும் பாண்டியன் செங்கோற்குச் சிறந்தவன் என்றும், அவன் நாடு தீங்கற்றதென்றும், நாற்றிசையும் பேரும் புகழும் பரவியிருந்தது. "மன்பதை காக்கும் நீள்குடிச் சிறந்த தென்புலங் காவலின் ஓரீஇப்பிறர் வன்புலங் காவலின் மாறியான் பிறக்கே" (புறம். 71) என்பது பூதப்பாண்டியன் வஞ்சினம். |