பக்கம் எண் :

168பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்

"தென்னவன் நாட்டுச் சிறப்பும் செய்கையும்
கண்மணி குளிர்ப்பக் கண்டேன் ஆதலின்
வாழ்த்திவந் திருந்தேன் இதுவென் வரவு"
(சிலப். 11:54-56)

என்பது மாங்காட்டு மறையோன் கூற்று.

"கடுங்கதிர் வேனில்இக் காரிகை பொறாஅள்
படிந்தில சீறடி பரல்வெங் கானத்துக்
கோள்வல் உளியமும் கொடும்புற் றகழா
வாள்வரி வேங்கையும் மான்கணம் மறலா
அரவும் சூரும் இரைதேர் முதலையும்
உருமும் சார்ந்தவர்க் குறுகண் செய்யா
செங்கோல் தென்னவர் காக்கும் நாடென
எங்கணும் போகிய இசையோ பெரிதே
பகலொளி தன்னினும் பல்லுயிர் ஓம்பும்
நிலவொளி விளக்கின் நீளிடை மருங்கின்
இரவிடைக் கழிதற் கேதம் இல்."
(சிலப். 13: 3-12)

என்பது கோவலன் கூற்று.

"பொன்செய் கொல்லன் தன்சொற் கேட்ட
யானோ அரசன் யானே கள்வன்
மன்பதை காக்கும் தென்புலங் காவல்
என்முதற் பிழைத்தது கெடுகவென் ஆயுள்என
மன்னவன் மயங்கிவீழ்ந் தனனே"
(சிலப். 20: 74-78)

என்றது ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனை.

4. வணிகர் பண்பாடு

   அக்காலத்து வாணிகர்,

"வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோற் செயின்."
(குறள். 120)

என்னும் நெறியைக் கடைப்பிடித்து, நடுநிலை பூண்டு நல்லுள்ளத்தினராய்ப் பிறர் பொருளையும் தமதுபோற் பேணி, தாம் கொள்ளும் சரக்கையும் தாம் கொடுக்கும் விலைக்கு மிகுதியாகக் கொள்ளாது தாம் கொடுக்கும் சரக்கையும் தாம் கொண்ட விலைக்குக் குறையக் கொடாது, குற்றத்திற் கஞ்சி உண்மையான விலை சொல்லிப் பல்வேறு நாட்டு அரும்பொருள்களை விற்று, பேராசையின்றி நேர்மையாகப் பெரும் பொருளீட்டிப் பல்வேறு அறஞ்செய்து, வாழ்ந்து வந்தனர்.