"நெடுநுகத்துப் பகல்போல நடுவுநின்ற நன்னெஞ்சினோர் வடுவஞ்சி வாய்மொழிந்து தமவும் பிறவும் ஒப்ப நாடிக் கொள்வதூஉம் மிகைகொளாது கொடுப்பதூஉம் குறைகொடாது பல்பண்டம் பகர்ந்துவீசும் தொல்கொண்டித் துவன்றிருக்கை." (பட்டினப். 206-12) "அறநெறி பிழையா தாற்றின் ஒழுகி ............ சிறந்த தேஎத்துப் பண்ணியம் பகர்நரும்" (மதுரைக். 500-6) அறநெறியிற் பொருளீட்டுதலே அக்கால வாணிகர் குறிக் கோள் என்பது, "மூன்றின் பகுதி" என்னும் துறையால் (தொல். அகத். 41) அறியப்படும். மூன்றன் பகுதியாவது, அறத்தாற் பொருளீட்டி அப் பொருளால் இன்பம் நுகர்வேன் எனல். கோநகர்க் கடை மறுகில், எப்பொருள் அங்கு விற்கும் என மக்கள் மயங்காதபடி, ஒவ்வொருவகைக் கடைக்கும் ஒவ்வொரு வகையான கொடி கட்டப்பட்டிருந்தது. "சாத ரூபம் கிளிச்சிறை ஆடகம் சாம்பூ நதமென ஓங்கிய கொள்கையில் பொலந்தெரி மாக்கள் கலங்கஞர் ஒழித்தாங்கு இலங்குகொடி யெடுக்கும் நலங்கிளர் வீதியும்." (சிலப். 14: 201-4) "கள்ளின் களிநவில் கொடி" (மதுரைக். 372) வெளிநாட்டு வணிகரும் இம் முறையைக் கையாண்டனர். "கலந்தரு திருவிற் புலம்பெயர் மாக்கள் வேலைவா லுகத்து விரிதிரைப் பரப்பில் கூல மறுகில் கொடியெடுத்து நுவலும் மாலைச் சேரி" (சிலப். 6:130-3) வணிகம் செய்து வண்பொருள் ஈட்டாது கணிகையொடு கூடிக் கைப்பொருள் தொலைத்த கோவலனும், பல பேரறங்கள் செய்து வந்தமை பின்வரும் பகுதிகளால் அறியப்படும். "மாமுது கணிகையர் மாதவி மகட்கு நாம நல்லுரை நாட்டுதும் என்று ......................................................... மணிமே கலையென வாழ்த்திய ஞான்று மங்கல மடந்தை மாதவி தன்னொடு செம்பொன் மாரி செங்கையிற் பொழிய" (சிலப். 15: |