பக்கம் எண் :

பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்171

"உரன்கெழு நோன்பகட் டுழவர் தங்கை
.............
தொடிக்கை மகடூட மகமுறை தடுப்ப"
(சிறுபாண்: 190-2)

என்றது புதியோரையே.

"செட்டிமக்கள் வாசல்வழிச் செல்லோமே செக்காரப்
பொட்டிமக்கள் வாசல்வழிப் போகோமே - முட்டிபுகும்
பார்ப்பார் அகத்தையெட்டிப் பாரோமே எந்நாளும்
காப்பாரே வேளாளர் காண்"

என்று கம்பர் பாடியதும் இதுபற்றியே.

"புறஞ்சிறை மாக்கட் கறங்குறித் தகத்தோர்
புய்த்தெறி கரும்பின் விடுகழை தாமரைப்
பூம்போது சிதைய வீழ்ந்தென"
(புறம். 28:11-3)

என்னும் புறப்பாட்டடிகள், "கரும்பு தின்னக் கைக்கூலியா?" என்னும் பழமொழியைத் தோற்றுவித்த காவிரிப்பூம்பட்டினத்து வேளாளன் செயலை நினைவுறுத்தும்.

   பிராமணர் அரசர் வணிகர் வேளாளர் என்னும் நால்வகுப் பாருள்ளும், வேளாளனே அமைச்சுத் தொழிற்குச் சிறந்தவன் என்று குலோத்துங்கச் சோழனிடம் ஒளவையார் கூறியதும், வேளாளரின் வேளாண்மை பற்றியே.

"நூலெனிலோ கோல்சாயும் நுந்தமரேல் வெஞ்சமராம்
கோலெனிலோ ஆங்கே குடிசாயும் - நாலாவான்
மந்திரியும் ஆவான் வழிக்குத் துணையாவான்
அந்த அரசே அரசு" (தனிப்பாடல்)
"உழுவார் உலகத்தார்க் காணியஃ தாற்றாது
எழுவாரை யெல்லாம் பொறுத்து"
(குறள்.1032)

என்பதும் பண்பாடு குறித்ததே.

"வித்தும் இடல்வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்"
(குறள். 85)

என்னுங் குறள், வேளாளரின் விருந்தோம்பற் சிறப்பைக் குறிப்பாய் உணர்த்தும்.

6. பிறவகுப்பார் பண்பாடு

"உறுவரும் சிறுவரும் ஊழ்மா றுய்க்கும்
அறத்துறை யம்பியின் மான"
(புறம். 381)

என்று நன்னாகனார் கூறுவதால், ஓடக்கூலி கொடுக்க இயலாத எளியாரையும் இரப்போரையும், இலவசமாக ஆறு கடத்தும் அறவோடங்களும் அக்காலத் திருந்தமை அறியப்படும்.