பக்கம் எண் :

பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்173

என்னும் வேட்டுவன், புலவனாயிருந்ததினால் பொய்யாமொழி யாரின் புலமையை ஆய்ந்ததும், அவரைப் பொருளொடு விட்டதும்,

"விழுந்ததுளி அந்தரத்தே வேமென்றும் வீழின்
எழுந்து சுடர்சுடுமென் றேங்கிச் - செழுங்கொண்டல்
பெய்யாத கானகத்தே பெய்வளையும் போயினாள்
பொய்யா மொழிப்பகைவர் போல்"

என்னும் விழுமிய வெண்பாவைப் பாடியதும், கருதி மகிழத்தக்கன. குட்டை, மொட்டை என்பனபோல் முட்டை என்பதும் ஓர் இயற் பெயர்.

   பீசப்பூர் என்னும் விசயபுரச் சுலுத்தானின் படைகள் 1659ஆம் ஆண்டு வல்லத்தின்மேற் சென்றபோது, விசயராகவ நாயக்கரும் அவர் படைஞரும் கோட்டையை விட்டுவிட்டு ஓடிப் போய் விட்ட னர். அன்று வல்லத்தைக் கொள்ளையடித்துப் பெரும் பொருள் கவர்ந்த கள்வர், சுலுத்தான் படைகள் திரும்பியபின், தாம் கவர்ந்த தில் ஒரு பகுதியை விசயராகவ நாயக்கருக்கு மீளக் கொடுத்து விட்டனர்.

   இந் நூற்றாண்டிலும் கள்வரும் கொள்ளைக்காரரும் பல இடங்களிற் பண்பாடு காட்டியுள்ளனர். மன்னார்குடியிலிருந்த ஒரு பண்ணையார் (மிராசுதார்) தம் பெருங் குடும்பத்துடன் இராமேசு வரம் போய்ப் பல வண்டிகளில் திரும்பும்போது, வழிப்பறித்த கொள்ளைக்கூட்டத் தலைவன், அப் பண்ணையாரின் மனைவியார் ஈகையாட்டியரா யிருந்ததினால், அவர் இருந்த வண்டியை மட்டும் தானே காவல்செய்து கவராது விட்டுவிட்டான்.

   வறண்ட நிலத்துப் பாலைவாணர் இக்காலத்தும் இங்ஙனம் ஒழுகின், வளமிக்க அக்காலத்தில் ஏனை நிலவாணர் எங்ஙனம் இருந்திருப்பர் என்பதை ஒருவாறு உய்த்துணரலாம்.
 

7. பெண்டிர் பண்பாடு

   உயர்குடிப் பெண்டிர் கொண்டிருந்த கற்புக் குணங்களுள், நாணமும் பயிர்ப்பும், பண்பாட்டுக் குணங்களாம். கணவன் பெயர் சொல்லாமை, அவன் சொல்லைத் தட்டாமை, அவன் குற்றத்தை மறைத்தல், பின்னுண்டல், பின்தூங்கி முன்னெழுதல், விருந்து மிக வரினும் சலியாமை, கணவனில்லாக் காலத்துத் தன்னை அணி செய்யாமை, அவன் இறப்பின் உடன்கட்டையேறல் அல்லது வேறு வகையில் உயிர்துறத்தல், அவனுக்குப்பின் உயிர்வாழ நேரின் மறுமணம் செய்யாமை ஆகியவை, கற்புடை மனைவியர் பண்பாட்டுக் குணங்களாகும்.

   மறக்குல மகளிர் மறப்பண்பு, தன்மானம், அரசப் பற்று, நாட்டுப் பற்று முதலிய பண்பாட்டுக் குணங்களை உடையவரா யிருந்தனர்.