| இனப்படுத்தல் ஒரு பொருளை, உடம்பின் அல்லது உறுப்பின் வடிவில், ஒத்த வேறு பொருள்களைக் கண்ட பண்டைத் தமிழர், முன்னதன் பெயர்க்கு அடை கொடுத்துப் பின்னவற்றிற் கிட்டு, அவற்றை யெல்லாம் ஓரினப் படுத்தியிருக்கின்றனர். எ.டு : வேம்பு, கறிவேம்பு, நாய்வேம்பு, நிலவேம்பு, நீர்வேம்பு. வேம்பைப் பிறவற்றோடு ஒப்புநோக்கி நல்ல வேம்பு என்றனர். இடுகுறியின்மை "எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே" (640) என்பது தொல்காப்பியம். ஆனால், பல சொற்கட்டுப் பார்த்த மட்டில் பொருள் தோன்றாது. அவற்றை ஆழ்ந்து ஆராய வேண்டும். இதனையே, "மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா" (877) என்று தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது. பலா, பனை, பொன், மரம் முதலியவற்றை மொழிநூலறிவும் சொல்லாராய்ச்சியுமில்லா இலக்கண வுரையாசிரியர், இடுகுறி யென்று குறிப்பது வழக்கம். பலா பருத்த பழத்தையுடையது. பல் - பரு - பருமை. ஒ.நோ: சில் - சின் - சிறு. சின்மை = சிறுமை. "சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கி யாங்கு" (குறுந். 18) பனை கருக்குமட்டையுடையது. பல் - பன் = அறுவாட்பல், பன்னறுவாள், பன்வைத்தல் என்னும் வழக்குகளை நோக்குக. பன் - பனை = கூரிய பற்போன்ற கருக்குள்ளது. பொன் பொற்பு அல்லது பொலிவுள்ளது. பொல்-பொலி-பொலிவு. பொல் - பொற்பு = அழகு. பொல் - பொலம் - பொலன். பொல்-பொன். பொற்ற = அழகிய (சீவக. 270). பொல்லா = அழகில்லாத (ஒளவையார்). பொற்றது = பொலிவுற்றது (சீவக. 649). மரம் உணர்ச்சியற்றது. கால் உணர்ச்சியற்றால், மரத்துப் போய்விட்டது என்பது வழக்கம். உணர்ச்சியற்றவனை மரம் போலிருக்கிறான் என்பர். மதமதப்பு = உணர்ச்சியின்மை, திமிர். மதம் - மரம். மதத்தல் = மரத்தல். ஒ.நோ: விதை - விரை. இடுகுறியில்லாமலே ஒரு பெருந் தாய்மொழியை ஆக்கியது, பண்டைத் தமிழரின் நுண்மாண் நுழைபுலத்தைச் சிறப்பக் காட்டும். |