| இயற்கைச் சொல்லாக்கம் தமிழில் எல்லாச் சொற்களும் இயற்கையான முறையில் அமைந்தவை. வடமொழியில் ஆ என்னும் முன்னொட்டால் எதிர்ப்பொருள் வினைச்சொற்களை அமைத்துக் கொள்வர். எ.டு: கச்சதி = செல்கிறான். ஆகச்சதி = வருகிறான். தத்தே = கொடுக்கிறான், ஆதத்தே = எடுக்கிறான். இத்தகைய செயற்கை யமைப்புத் தமிழில் இல்லை. தூய்மை குமரிக்கண்டத்தில் தமிழ் தவிர வேறொரு மொழியும் வழங்க வில்லை. வெளிநாட்டிலிருந்து பொருள்கள் வரின், அவற்றிற்கு உடனுடன் தூய தமிழ்ப் பெயர்கள் அமைக்கப்பட்டன. கரும்பு சீன நாட்டினின்று அதிகமானின் முன்னோராற் கொண்டுவரப்பட்டது. "அமரர்ப் பேணியும் ஆவுதி யருத்தியும் அருப்பெறன் மரபிற் கரும்பிவட் டந்தும் நீரக விருக்கை யாழி சூட்டிய தொன்னிலை மரபின்நின் முன்னோர் போல" (புறம். 99) என்று ஒளவையார் பாடியிருத்தல் காண்க. சீன நாட்டை வானவர் நாடென்பது பண்டை வழக்கு. கருப்பு நிறமானது கரும்பு. மிளகாய் அமெரிக்காவினின்று வந்ததாகக் கருதப்படுகின்றது. மிளகு + காய் = மிளகாய். மிளகுபோற் காரமுள்ள காய் மிளகாய். இவ் வழக்கைப் பின்பற்றியே, உருளைக்கிழங்கு, புகையிலை, நிலக் கடலை, வான்கோழி முதலிய பெயர்களும் பிற்காலத்திற் ஏற்பட் டுள்ளன. இலக்கண அமைப்பு இருதிணை: பொருள்களையெல்லாம், பகுத்தறிவுள்ளது, பகுத்தறிவில்லது எனப் பகுத்தது தமிழ்ப் பொதுமக்களே. காளையும் ஆவும் அஃறிணையில் ஆண்பாலும் பெண்பாலு மாயினும், காளை வந்தான், ஆவு வந்தாள் என்று யாரும் சொல்லும் வழக்கமில்லை. காளை வந்தது, ஆவு வந்தது என்று இரண்டையும் ஒன்றன்பாலிற் கூறுவதே மரபு. முருகன் வந்தான், வள்ளி வந்தாள் என்று ஆண்பால் பெண் பால் (பகுத்தறிவுள்ள) மக்களுக்கே வகுக்கப்பட்டிருக்கின்றன. இவ் வுலகிற் பகுத்தறிவுள்ள மக்களும் இறைவனுமே உயர்ந்த வகுப் பென்றும், பிற வெல்லாம் உயிருள்ளவையாயினும் இல்லவை |