| யாயினும் தாழ்ந்த வகுப்பேயென்றும், ஏற்கெனவே பொதுமக்கள் வகுத்த இரு வகுப்பிற்கும், இலக்கணியர் முறையே உயர்திணை, அஃறிணையென்று பெயர்மட்டும் இட்டிருக்கின்றனர். இலக்கணம் என்பது, ஏற்கெனவே ஏற்பட்டுள்ள மொழியமைதிகளுள் நல்ல வற்றை மட்டும் கொண்டு, அவற்றிற்குப் பெயரிட்டுக் காட்டும் முறையேயன்றி, புதிதாக ஏற்பட்ட புலவர் படைப்பன்று. பகுத் தறிவை அளவையாகக் கொண்டு பொருள்களைப் பகுத்த இஃதொன்றே, பண்டைத் தமிழரின் அகக்கரண வளர்ச்சியைக் காட்டப் போதிய சான்றாகும். ஓரியலொழுங்கு யான், யாம், யாங்கள்; நான், நாம், நாங்கள்; நீன், நீம், நீங்கள்; தான், தாம், தாங்கள் என்னும் மூவிடப் பகரப் பெயர்களும்; அவன் அவள் அவர் அது அவை | இவன் இவள் இவர் இது இவை | உவன் உவள் உவர் உது உவை | எவன் எவள் எவர் எது எவை | என்னும் சுட்டுப் பெயர் வினாப்பெயர்களும்; ஒன்றுமுதல் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்பது வரைப்பட்ட எண்ணுப் பெயர்களும், கொண்டுள்ள ஓரியலமைப்பை வேறெம்மொழியிலும் காணமுடியாது. பொருட்பால் ஆரிய மொழிகளிற்போல் ஈறுபற்றிய பாலமைப்பின்றி, பொருள்களின் ஆண்மை பெண்மையும் ஒருமை பன்மையும்பற்றிய பாலமைப்பே தமிழிலுள்ளது. வடமொழியில், மனைவியைக் குறிக்கும் தார, பார்யா, களத்திர என்னும் முச்சொற்களுள், முதலது ஆண்பால்; இடையது பெண்பால்; கடையது அலிப்பால். பொத்தகத்தைக் குறிக்கும் சொற்களுள், கிரந்த ஆண்பால்; ச்ருதி பெண்பால்; புஸ்தக அலிப்பால். இதினின்று அம் மொழியின் ஒழுங்கை அறிந்துகொள்க. பாலிசைவு தமிழ்ச் சொற்றொடர்களில், எழுவாயும் பயனிலையும் பெரும்பாலும் திணைபால் எண் இடம் ஒத்தேயிருக்கும். திணைபால் எண் இடமயக்கம் இருப்பினும் தெளிவாய்த் தெரியும். |