2 இன்பத்தின் இகந்தொரீஇ இலைதீந்த உலவையால் துன்புறூஉம் தகையவே காடென்றார் அக்காட்டுள் அன்புகொண் மடப்பெடை அசைஇய வருத்தத்தை மென்சிறக ராலாற்றும் புறவெனவும் உரைத்தனரே; 3 கன்மிசை வேய்வாடக் கனைகதிர் தெறுதலால் துன்னரூஉம் தகையவே காடென்றார் அக்காட்டுள் இன்னிழல் இன்மையான் வருந்திய மடப்பிணைக்குத் தன்னிழலைக் கொடுத்தளிக்கும் கலையெனவும் உரைத்தனரே; (தனிச்சொல்) எனவாங்கு, இனைநல முடைய கானம் சென்றோர் புனைநலம் வாட்டுநர் அல்லர் மனைவயிற் பல்லியும் பாங்கொத் திசைத்தன நல்லெழில் உண்கணும் ஆடுமால் இடனே." (கலித். 11) இது, காட்டுவழியாய்த் தொலைவான இடத்திற்குப் பொருள் தேடச் சென்ற கணவனார், காட்டிலுள்ள ஆண்யானை பெண் யானைக்கும், ஆண்புறா பெண்புறாவிற்கும், ஆண்மான் பெண் மானிற்கும் காட்டும் அன்பை ஏற்கெனவே தனக்குச் சொல்லியிருத் தலால், அவற்றை நேரிற் கண்டபின் நீண்டநாள் வேற்றிடத்தில் தங்கி யிராது விரைந்து வருவாரென்றும், அதற்கேற்ற நற்குறிகளும் தோன்றுகின்றனவென்றும், மனைவி தன் தோழிக்குச் சொல்லியது. இது நாலுறுப்பமைந்த நேரிசை யொத்தாழிசைக் கலி. ஐயுறுப்பமைந்த அம்போதரங்க வொத்தாழிசைக் கலியும், ஆறுறுப் பமைந்த வண்ணக வொத்தாழிசைக் கலியும் இலக்கண நூல்களுட் கண்டுகொள்க. காதலையும் கடவுளையும் வண்ணித்துப் பாடு வதற்கு அவற்றிலும் சிறந்த செய்யுள்வகை எதிர்காலத்திலும் இருக்க முடியாது. அம்போதரங்கம், வண்ணகம் என்னும் இரண்டும் தென் சொற்களே. அம்போதரங்கம் அம்முதல் - பொருந்துதல், ஒட்டுதல். அம் = (ஒட்டும்) நீர். "அம்தாழ் சடையார்" (வெங்கைக்கோ. 35) அம் - ஆம் = நீர். "ஆம்இழி அணிமலை" (கலித். 48) அம் - அம்பு = நீர், கடல் "அம்பேழும்" (திருப்பு. 32) |