ஒ.நோ: கும் - கும்பு, செம் - செம்பு. வெம் - வெம்பு. தரங்கு = 1. ஈட்டி போன்ற குத்துக் கருவி. 2. கரையைக் குத்தும் அலை. "தரங்காடுந் தடநீர்" (தேவா. 463: 1) தரங்கு - தரங்கம் = அலை. "நீர்த்தரங்க நெடுங்கங்கை" (பெரியபு. தடுத்தாட். 165). தரங்கம்பாடி - அலை யிரையும் ஒரு கடற்கரையூர். ஓ என்பது ஒரு சாரியை. அம் என்பது அப் என்று திரிந்தும், அம்பு என்பது திரியாதும், வடமொழிச் சென்று வழங்கும். வண்ணம் வள் - வளை. வளைத்தல் = எழுதுதல், வரைதல். "உருவப் பல்பூ ஒருகொடி வளைஇ" (நெடுநல். 113) வள் - வரி. வரிதல் = எழுதுதல், ஓவியம் வரைதல். வரித்தல் = எழுதுதல், சித்திரமெழுதுதல். வரி = எழுத்து. வரி + அணம் - வரணம் = எழுத்து, எழுதும் நிறம், நிறம் பற்றிய குலம். வரணம் - வர்ண (வ). வரி என்னும் சொல்லின் பொருள், அதற்கு மூலமான வள் (வண்) என்னும் அடியாலும் உணர்த்தப் பெறும். வள் - வண் - வண்ணம் = எழுத்து, நிறம், வகை, ஓசைவகை, உருட்டு வண்ணம், சிறப்போசைப் பாட்டு. வண்ணம் - வண்ணகம் - வர்ணக (வ.) வண்ணம் - வண்ண (பிராகிருதம்). வண்ணிகன் - வர்ணிக (வ.) = எழுத்தாளன். வண்ணம் என்பது வரணம் என்பதன் திரிபன்று; வள் என்னும் அடிச்சொல்லின் திரிபேயாகும். ஒ.நோ: திள் - திண் - திண்ணை = திரண்ட மேடு. திள் - திரு - திரள் - திரளை - திரணை. திண்ணை, திரணை என்னும் இரண்டும் ஒரே வேரினின்று தோன்றிய ஒருபொருட் சொற்கள். ஆயின், திண்ணை என்பது திரணை என்பதன் திரிபன்று; திண் என்னும் அடிப்படைச் சொல்லினின்று திரிந்தது. இங்ஙனமே |