பக்கம் எண் :

30பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்

மல்லரை மறஞ்சாய்த்த மால்போல்தன் கிளைநாப்பண்
கல்லுயர் நனஞ்சாரல் கலந்தியலும் நாடகேள்"
(கலித். 52)


என்னும் கலித்தொகைச் செய்யுளின் தரவு, யானையின் செவிமறை வில் பின்னிருந்து வந்து பாய்ந்த புலியை அந்த யானை சினந்தது, காதலனின் களவொழுக்கத்தைப்பற்றிப் பழிதூற்றிய அயலாரைக் கடிந்ததாகவும்; யானை புலியைக் குத்தி மாறுபாடு தீர்ந்தது காதலன் காதலியை மணந்து கொண்டு அயலாரை வாயடக்குவதாகவும்; யானை தன் இனத்தின் நடுவே உலாவித் திரிதல், காதலன் தன் உறவினருடன் கூடியிருந்து இல்லறம் நடத்துவதாகவும், உள்ளுறைப் பொருள்படத் தோழி கூறிய கூற்றாக அமைந்திருத்தல் காண்க.

   பண்டைத் தமிழர் செய்யுட்கலையிற் சிறந்திருந்ததனால், செய்யுளுக்கும் நூற்பாவிற்கும் பொருள்கூறும் உரை உட்பட, எல்லா இலக்கியத்தையும் செய்யுளிலேயே இயற்றியிருந்தனர்.

"பாட்டுரை நூலே வாய்மொழி பிசியே
 அங்கதம் முதுசொலோ டவ்வேழ் நிலத்தும்
.........................................................
யாப்பின் வழிய தென்மனார் புலவர்"
(செய்.78)

என்று தொல்காப்பியம் கூறுதல் காண்க.

2. துப்புரவு

   பண்டைத் தமிழ்மக்கள் விடிகாலையில் எழுந்தவுடன், ஊருக்கு வெளியே சென்று காலைக்கடன் கழித்து, ஆற்றில் அல்லது கால்வாயில் அல்லது குளத்தில் கால் கழுவுவர். ஆற்றிற்குப் போதல், கால்வாய்க்குப் போதல், குளத்திற்குப் போதல், கொல்லைக்குப் போதல், வெளிக்குப் போதல் என்னும் உலக வழக்கு இதை யுணர்த்தும். இத்தகைய வழக்கும் ஒன்றுக்குப் போதல். இரண்டுக்குக் போதல் என்னும் இடக்கரடக்கலும் தமிழர் நாகரிகத்தைக் காட்டும்.

   கல்வித் தொழிலாளர், காவலர், வணிகர் முதலிய உடலுழைப் பில்லா வகுப்பார் காலையிலும்; உழவர், கைத்தொழிலாளர், கூலிக்காரர் முதலிய உழைப்பாளி வகுப்பார் மாலையிலும் நாள்தோறும் குளித்து வந்தனர். அழுக்கைத் தேய்ப்பதற்கு ஆடவர் பீர்க்கங்கூட்டைப் பயன்படுத்துவதுண்டு. பெண்டிர் மஞ்சள், சுண்ணம் முதலியவற்றைத் தேய்த்துக் குளிப்பர்.

   சுண்ணம் என்பது பலவகை நறுமணப் பொருள்களைச் சேர்த்து இடிக்கும் பொடி. அதை இடித்து வைப்பது பண்டைக் காலத்து இளமகளிர்க்குப் பெரு வழக்கமாயிருந்தது. சுண்ணமிடிக் கும் போது பாட்டுப் பாடுவர். இச் செயல் மாணிக்கவாசகர் மனத்தைக் கவர்ந்ததினால், திருப்பொற் சுண்ணம் என்னும் திருவாசகப் பாடல் தில்லையில் அருளிச் செய்யப்பெற்றது.