பக்கம் எண் :

பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்31

   அரண்மனையில் வாழும் அரச மகளிரும், மாளிகைகளில் வாழும் செல்வப் பெண்டிரும், மாதவி போலும் நாடகக் கணிகை யரும் கோட்டம், துருக்கம், தகரம், அகில், சந்தனம் என்னும் ஐவகை விரையும் (நறுமணப் பொருளும்); நாவல் அல்லது பூவந்தி, கடு, நெல்லி, தான்றி, ஆல், அரசு, அத்தி, இத்தி, முத்தக்காசு அல்லது கருங்காலி, மாந்தளிர் என்னும் பத்துவகைத் துவரும்; இலவங்கம், பச்சிலை, கச்சோலம், ஏலம், நாகணம், கோட்டம், நாகாம், மதாவரிசி, தக்கோலம், நன்னாரி, வெண்கோட்டம், காசறை (கத்தூரி), வேரி, இலாமிச்சம், கண்டில் வெண்ணெய், கடு, நெல்லி, தான்றி, துத்தம், வண்ணக் கச்சோலம், அரேணுகம், மாஞ்சி, சயிலேகம், புழுகு, புன்னை நறுந்தாது, புலியுகிர், சரளம், தமாலம், வகுளம், பதுமுகம், நுண்ணேலம், கொடுவேரி என்னும் முப்பத் திருவகை. ஓமாலிகையும் ஊறவைத்த நன்னீரிற் குளித்து வந்தனர்.

   ஆடவர் அறிவன் (புதன்) காரியும் (சனியும்), பெண்டிர் செவ்வாய் வெள்ளியும், ஒழுங்காய் எண்ணெய் தேய்த்துத் தலை முழுகினர். குளிப்பு நீராட்டு என்றும், தலைமுழுக்கு நெய்யாட்டு என்றும் சொல்லப்பெறும். நெய்யாட்டில் எண்ணெயையும் உடம் பழுக்கையும் போக்க, சீயற்காய் அரையல், அரைப்பு அரையல், உசிலைத் தூள், பாசி(பச்சை)ப் பயற்றுமா, களிமண் முதலியவற்றைப் பயன்படுத்தினர்.

   சீயற்காய் அல்லது சீக்காய் என்பது, அழுக்கைப் போக்குங் காய் என்று பொருள்படுவது; சிகைக்காய் என்பதன் மரூஉ அன்று.

சீத்தல் = 1. துடைத்தல்.
"மென்பூஞ் செம்மலொடு நன்கலஞ் சீப்ப" (மதுரைக். 685)
2. போக்குதல்.
"இருள்சீக்குஞ் சுடரேபோல்" ( கலித். 100: 24)
3. துப்புரவாக்குதல் (சூடா.)
"ஊர்க்கும் அணித்தே பொய்கை பொய்கைக்குச்
சேய்த்தும் அன்றே சிறுகான் யாறே
கூழைக் கெருமண் கொணர்கஞ் சேறும்"
(குறுந். 113)


என்னும் குறுந்தொகைச் செய்யுள். பண்டைத் தமிழ மகளிர் ஊருக்கணித்தான குடிநீர்நிலையிற் குளிக்காமல் சற்று அப்பா லுள்ள காட்டாற்றிற்குச் சென்று குளித்ததையும், கூந்தலழுக்குப் போக்கக் களிமண் எடுத்துச் சென்றதையும், கூறுதல் காண்க.

   இரு பாலரும் குளித்தவுடனும் தலைமுழுகியவுடனும், வெளுத்த துவர்த்து முண்டினால் தலையையும் உடம்பையும்