பக்கம் எண் :

32பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்

துவர்த்தி, வெளுத்தாடை அல்லது புத்தாடை எடுப்பர். மாற்றாடை யில்லாவிடின், முன்பு அணிந்திருந்த ஆடையைத் துவைத்துக் கொள்வர்.

   பெண்டிர் காரகிற் புகையாலும் சந்தனக் கட்டைப் புகை யாலும் தம் கூந்தலின் ஈரம் புலர்த்துவர்.

   காலையிற் குளிப்பினும் குளியாவிடினும், பல் துலக்காமல் ஒருவரும் உண்பதில்லை.

   சோறுண்பவர், வாயும் முகமும் கைகாலும் கழுவிய பின், துப்புரவான இடத்தில் தடுக்கில் அல்லது பலகையில் அமர்ந்து சப்பளித்திருந்து (சம்மணங்கூட்டி உட்கார்ந்து), கழுவிய வாழை இலையில் அல்லது வெண்கல வட்டிலில் வலக்கையாலேயே எடுத்து உண்பர். அரசர் பொற்கலத்திலும் செல்வர் வெள்ளிக் கலத்திலும் உண்பது வழக்கம். பெற்றோரும் பெற்ற சிறு பிள்ளைகளுமா யிருந்தாலொழிய, ஒரே கலத்தில் அல்லது இலையிற் பலர் உண்பதில்லை. உண்டெழுந்தபின், உண்ட இடம் இலையகற்றித் தண்ணீர் அல்லது சாணநீர் தெளித்துத் துப்புரவாக்கப் பெறும். இலையில் விட்ட மிச்சிலைப் பெற்றோரும் மனைவியரும் இரப்போரும் தவிரப் பிறர் உண்ணார். சில உணவு வகையால் ஏற்படும் வாய் நாற்றத்தைப் போக்குவதற்கு, நறுமணச் சரக்கை வாயிலிடுதல், வெற்றிலை தின்னுதல், மார்பிற் சந்தனம் பூசுதல் முதலியவற்றைக் கையாள்வர். இவற்றைச் செரிமானத்தின் பொருட்டென்று சொல்வதுமுண்டு.

   ஆடவர் அறிவன் (புதன்) காரியும் (சனியும்), பெண்டிர் செவ்வாய் வெள்ளியும், ஒழுங்காய் எண்ணெய் தேய்த்துத் தலை முழுகினர். குளிப்பு நீராட்டு என்றும், தலைமுழுக்கு நெய்யாட்டு என்றும் சொல்லப்பெறும். நெய்யாட்டில் எண்ணெயையும் உடம் பழுக்கையும் போக்க, சீயற்காய் அரையல், அரைப்பு அரையல், உசிலைத் தூள், பாசி(பச்சை)ப் பயற்றுமா, களிமண் முதலியவற்றைப் பயன்படுத்தினர்.
சீயற்காய் அல்லது சீக்காய் என்பது, அழுக்கைப் போக்குங் காய் என்று பொருள்படுவது; சிகைக்காய் என்பதன் மரூஉ அன்று.