பக்கம் எண் :

பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்33

   வெளிச் சென்று வந்த வீட்டாரும் வெளியாரும், வீட்டிற்குள் புகுமுன் பாதத்தைக் கழுவிவிட வேண்டும் என்பது ஒழுக்க நெறி.

   வெப்பமில்லாத நாளிலும் வேளையிலும் முள்ளில்லாத இடத்திலும் கூட, வீட்டை விட்டு வெளிச் செல்லின், அடியில் மண்ணும் மாசும் படாதபடி செருப்பணிந்தே செல்வர் உயர்ந்தோர். செருப்பு வாசற்கு வெளியே அல்லது வாசலண்டைதான் விடப் பெறும். எக் கரணியம்பற்றியும் உள்ளே கொண்டு செல்லப் படுவதில்லை.

   பிள்ளை பெற்ற வீட்டிற்கு ஏழு நாளும், மாதவிடாய் வந்தவளுக்குப் பன்னிரு நாளும், இழவுவீட்டிற்குப் பதினைந்து நாளும் தீட்டாம்.

தீட்டுள்ள பெண்டிர்,
"கலந்தொடா மகளிர்" (புறம். 299)
எனப்படுவர்.

3. ஊண்

   உலகில் முதன்முதல் உணவை நாகரிகமாய்ச் சமைத்துண்ட வன் தமிழனே. ஏனைய நாட்டாரெல்லாம், தம் நாட்டில் விளைந்த உணவுப் பொருள்களைப் பச்சையாகவும் சுட்டும் வெறுமையாய் அவித்தும் உண்டுவந்த காலத்தில் உணவைச் சோறும் கறியும் என இரண்டாக வகுத்து, நெல்லரிசியைச் சோறாகச் சமைத்தும், கறி அல்லது குழம்பு வகைகளை, சுவையூட்டுவனவும் உடம்பை வலுப்படுத்துவனவும் நோய் வராது தடுப்பனவுமான பலவகை மருந்துச் சரக்குகளை உசிலை (மசாலை) யாகச் சேர்த்து ஆக்கியும், உயர்வாக உண்டு வந்த பெருமை தமிழனதாகும்.

   காய்வகைகளைக் காம்பு களைந்து சீவ வேண்டுபவற்றைச் சீவிக் கழுவியும்; பித்தமுள்ளவற்றை அவித்திறுத்தும்; மஞ்சள், மிளகு அல்லது மிளகாய்வற்றல், சீரகம், கொத்துமல்லி, தேங்காய் முதலியவற்றை மைபோல் அரைத்துக் கலந்தும்; இஞ்சி, வெங்காயம் வெள்ளைப்பூண்டு, பெருங்காயம், கராம்பூ(கருவாப்பூ), கருவாப் பட்டை, ஏலம், சோம்பு முதலியவற்றை வேண்டுமளவு சேர்த்தும்; வெந்தபின் புளி அல்லது எலுமிச்சஞ்சாறு விடவேண்டியவற்றிற்கு விட்டும்; கடுகு, கறிவேப்பிலை முதலியன தூவி ஆவின் நெய்யில் தாளித்தும், முதன்முதற் குழம்பு காய்ச்சப்பெற்றது தமிழகத்திலேயே. தாளிப்பு இலக்கிய வழக்கில் குய் எனப்படும். "குய்யுடை யடிசில்" (புறம்.127).

  உலகில் அரிசியுள்ள தவசங்களிற் பலவகை யுள்ளன. அவற்றுள் நெல்லரிசிச் சோறுபோல் வேறொன்றும் சுவையாய்க்