குழம்பொடு பொருந்துவதில்லை. தமிழகத்திலேயே, காடைக் கண்ணியரிசி, குதிரைவாலியரிசி, சாமையரிசி, தினையரிசி, வரகரிசி என ஐவகை யரிசி யுள. அவை நெல்லரிசிக்கீடாகா. கம்பும் சோளமும் கஞ்சியும் கூழுமே சமைத்தற்குதவும். கேழ்வரகால் களியும் கூழும்தான் ஆக்க முடியும். கோதுமை, வாற்கோதுமை போன்ற பிற நாட்டுத் தவசங்கள் (தானியங்கள்), அப்பமும் (ரொட்டியும்) சிற்றுண்டியும்தான் அடவும் சுடவும் ஏற்கும். நெல்லரிசியுள்ளும் பலவகையுள. அவற்றுள் தலைசிறந்தது சம்பா. அதுவும் அறுபது வகைப்பட்டதாம். அவற்றுட் சிறந்தன சீரகச் சம்பாவும் சிறுமணிச் சம்பாவும். பச்சரிசி, புழுங்கலரிசி என்னும் இரு வகையுள், தமிழர் விரும்பியது பின்னதே. அது சூட்டைத் தணிப்பதனால் வெப்பநாட் டிற்கேற்றதாகும்; குழம்பின் சுவையையும் மிகுத்துக் காட்டும். அதற்காகவே, அதற்குரிய தனி முயற்சியை மேற்கொண்டனர். அதனால் ஏற்படும் வலுக் குறைவிற்குக் கறி வகைகளாலும் நெய்யாலும் ஈடு செய்யப் பெறும். "இருங்கா ழுலக்கை யிரும்புமுகந் தேய்த்த அவைப்புமாண் அரிசி அமலைவெண் சோறு" (சிறுபாண். 193-4) என்பது, தூய வெள்ளையாய் அரிசி தீட்டப்பட்டதைத் தெரிவிக்கும். பொதுவாக, காலைச் சிற்றுண்டியும் நண்பகல் மாலைப் பேருண்டியும் ஆக மூவுண்டிகளே பண்டைத் தமிழர் உண்டு வந்தனர். காலையுணவும் நண்பகலுணவும், உழவர்க்கும் கூலியாளர்க் கும் பழஞ்சோறும் பழங்கறியும் ஊறுகாயுமாகும். புதுக் கறியாயின் நெருப்பில் வாட்டியதும் துவையலுமா யிருக்கும். இராவுணவே அவருக்குப் புதுச் சமையலாகும். "மென்புலத்து வயலுழவர் வன்புலத்துப் பகடுவிட்டுக் குறுமுயலின் குழைச் சூட்டொடு நெடுவாளைப் பல்லுவியற் பழஞ்சோற்றுப் புகவருந்தி" (395) என்பது புறம். உழவர் மங்கல வினைநாளும் விழாநாளும் விருந்துநாளும் போன்ற சிறப்பு நாளிலன்றி மூவேளையும் நெல்லரிசிச் சோறுண் பதில்லை. வரகு, சாமை, கம்பு, சோளம், கேழ்வரகு முதலிய அவ்வக் காலத்து விளைந்த தவசத்தையே அவ்வக் காலத்துப் பகலுணவாய் உண்பர். |