பக்கம் எண் :

பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்35

   இல்லத்திலும் நிழலிலுமிருந்து வேலை செய்வோரெல்லாம், பெரும்பாலும், காலையிற் பழையதும் நண்பகல் மாலையிற் சுடுசோறும் உண்பர். அரசரும் செல்வரும் எல்லா நாளும், பிறரெல்லாம் சிறப்புநாளும் காலையிற் பலகாரமும் பொங்கலும் போன்ற சுடு சிற்றுண்டி வகைகளை உண்பர்.

   இருவேளைப் பேருண்டிகளுள், தமிழர்க்குச் சிறந்தது நண்பகலதே. குழம்புச் சோறும், மிளகு நீர்ச்சோறும், மோர் அல்லது தயிர்ச்சோறும் என, முக்கடவையுள்ளது பேருண்டி. அதை அறு சுவையுண்டி யென்பது வழக்கு. முக்கனிகளுள் ஏதேனுமொன்று இனிப்பும், பாகற்காய் அல்லது சுண்டைவற்றல் கசப்பும், காரவடை உறைப்பும், புளிக்கறியும் தயிரும் ஊறுகாயும் புளிப்பும், மாதுளங்காய் அல்லது கச்சல் துவர்ப்பும், உப்பேறி உவர்ப்பும் ஆகும். இத்தகைய உண்டி, தமிழரின் சுவை முதிர்ச்சியையும் தலைசிறந்த நாகரிகத்தையும் மருத்துவ அறிவையும் உடல்நல வுணர்ச்சியையும் ஒருங்கே காட்டும். அறுசுவையுள்ளும் தமிழர்க்குச் சிறந்தவை இனிப்பும் புளிப்பும் ஆகும். இது வெப்ப நாட்டியல்பு.

"முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்
 கழுவுறு கலிங்கம் கழாஅ துடீஇக்
 குவளை யுண்கண் குய்ப்புகை கமழத்
 தான்துழந் தட்ட தீம்புளிப் பாகர்
 இனிதெனக் கணவன் உண்டலின்
 நுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதன் முகனே" (164)
 என்னும் குறுந்தொகைச் செய்யுளும்,
"வேளை வெண்பூ வெண்டயிர்க் கொளீஇ
 ஆய்மகள் அட்ட அம்புளி மிதவை" (215)
"புறவுக்கரு வன்ன புன்புல வரகின்
 பாற்பெய் புன்கம் தேனொடு மயக்கிக்
 குறுமுயற் கொழுஞ்சூடு கிழித்த வொக்கலொடு
 ....................................................
 அமலைக் கொழுஞ்சோ றார்ந்த பாணர்க்கு" (34)
"பாலிற் பெய்தவும் பாகிற் கொண்டவும்
 அளவுபு கலந்து மெல்லிது பருகி"
(381)

என்னும் புறப்பாட்டடிகளும் இங்குக் கவனிக்கத்தக்கன. புன்கம் = சோறு. மிதவை = கூழ்.

   தமிழர் விருந்துள் தலைசிறந்தது திருமண விருந்து. அதிற் பதினெண்வகைக் கறியும், கன்னலும் (பாயசம்) படைக்கப்பெறும். பதினெண் வகைக் கறிகள்: அவியல்(உவியல்), கடையல், கும்மாயம்,