"நூலினு மயிரினும் நுழைநூற் பட்டினும் பால்வகை தெரியாப் பன்னூ றடுக்கத்து நறுமடி செறிந்த அறுவை வீதியும்" (14:205-7) என்னும் சிலப்பதிகார அடிகளால் அறியலாம். மயிரினும் என்ப தற்கு எலி மயிரினாலும் என்று உரை வரைந்துள்ளார் அடியார்க்கு நல்லார். மயிர் நிறைந்த ஒருவகை மலையெலி பண்டைத் தமிழ்நாட்டி லிருந்ததென்பதும், அதன் மயிரால் சிறந்த தாவளி (கம்பளம்) நெய்யப்பட்ட தென்பதும், "புகழ்வரைச் சென்னிமேற் பூசையிற் பெரியன பவழமே யனையன பன்மயிர்ப் பேரெலி." (1898) "செந்நெ ருப்புணுஞ் செவ்வெ லிம்மயி ரந்நெ ருப்பள வாய்பொற் கம்பலம்." (2686) என்று சீவகசிந்தாமணி கூறுவதால் அறியப்படும். ஆயினும், எலிமயிரால் மட்டுமன்றி ஆட்டுமயிராலும் ஆடை நெய்யப் பட்டமை, "எலிப்பூம் போர்வையொடு மயிர்ப்படம் விரித்து" (உஞ்சைக் 47: 179) என்னும் பெருங்கதை யடியால் அறியலாம். பண்டைத் தமிழ்நாட்டில் நெய்யப்பட்ட ஆடை வகைகளுள், "கோசிகம், பீதகம், பச்சிலை, அரத்தம், நுண்டுகில், சுண்ணம், வடகம், பஞ்சு, இரட்டு, பாடகம், கோங்கலர், கோபம், சித்திரக்கம்மி, குருதி, கரியல், பேடகம், பரியட்டக்காசு, வேதங்கம், புங்கர்க் காழகம், சில்லிகை, தூரியம், பங்கம். தத்தியம், வண்ணடை, கவற்று மடி, நூல்யாப்பு, திருக்கு, தேவாங்கு, பொன்னெழுத்து, குச்சரி, தேவகிரி, காத்தூலம், இறஞ்சி, வெண்பொத்தி, செம்பொத்தி, பணிப் பொத்தி" என 36 வகைகள்அடியார்க்குநல்லாராற் குறிக்கப் பெற்றுள. இவையல்லாமல், கம்பலம், கலிங்கம், காழகம், சீரை, துகில், தூசு, படம் முதலிய பலவுள. அறுக்கப்படுவதனால் அறுவை என்றும், துணிக்கப்படுவத னால் துணி என்றும், சவண்டிருப்பதனால் சவளியென்றும், ஆடை பல பொதுப்பெயர் பெறும். சவளுதல் துவளுதல். மென்காற்றிலும் ஆடுவது (அசைவது) ஆடை. சவளி என்னும் தமிழ்ச்சொல், த்ஜவுளி என்று தெலுங்கிலும் ஜவுளி என்று கன்னடத்திலும் எடுப்பொலியுடன் ஒலிக்கப்படுவதா லும், தமிழிலும் அங்ஙனம் இற்றைத் தமிழர் ஒலிப்பதாலும், வட சொல்லென்று தவறாகக் கருதப்படுகின்றது. வடமொழியில் இச் சொல் இல்லை. |