"மடங்கலிற் சினைஇ மடங்கா வுள்ளத் தடங்காத் தானை வேந்தர் உடங்கியைந் தென்னொடு பொருதும் என்ப அவரை ஆரமர் அலறத் தாக்கித் தேரொ டவர்ப்புறங் காணே னாயின் சிறந்த பேரம ருண்கண் இவளினும் பிரிக" (புறம்.71) என்று பூதப்பாண்டியன் தன் பகைவரை நோக்கிக் கூறிய வஞ்சின மும், அவன் இறந்தபின் உடன்கட்டையேறிய அவன் தேவி பாடிய, "பல்சான் றீரே பல்சான் றீரே செல்கெனச் சொல்லா தொழிகென விலக்கும் பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் றீரே ....................................................... பெருங்காட்டுய் பண்ணிய கருங்கோட் டீமம் நுமக்கரி தாகுக தில்ல எமக்கெம் பெருந்தோட் கணவன் மாய்ந்தென அரும்பற வள்ளிதழ் அவிழ்ந்த தாமரை நள்ளிரும் பொய்கையும் தீயும் ஓரற்றே" (புறம்.246) என்னும் பாட்டும், அறிஞர் உள்ளத்தை என்றும் உருக்குந் தன்மைய. ஒருவனுடைய மனைவி உரிமைப் பெண்ணாயினும் பெருமைப் பெண்ணாயினும் உழுவற் பெண்ணாயினும், மூவகையும் ஊழின் பயனே என்று முன்னோர் கருதினர். "தாரமும் குருவும்தலைவிதி" (ஆசிரியனும் மனைவியும் அமைவது ஊழ்முறை) என்னும் பிற்காலப் பழமொழியும், எங்கே முடிபோட்டு வைத்திருக்கிறதோ அங்கேதான் முடியும் என்று கூறும் வழக்குச் சொல்லும், "Marriages are made in heaven", "Marriage and hanging go by destiny" என்னும் ஆங்கிலப் பழமொழிகளும் இங்குக் கருதத் தக்கன. வாழ்க்கைத் துணையாகிய மனைவிக்கு ஊழ்த்துணை என்றும் பெயர். அம்மான் மகளும் அக்கை மகளும்போல், மணக்கக்கூடிய உறவுமுறைப் பெண் உரிமைப்பெண்; உறவுமுறையின்றிச் செல்வக் குடும்பத்தினின்று எடுக்கும் பெண் பெருமைப்பெண்; இரண்டு மன்றி ஒருவன் தானே கண்டவுடன் காதலித்து மணக்கும் பெண் உழுவற் பெண். பல பிறப்பாகத் தொடர்ந்து மனைவியாய் வருபவள் உழுவற் பெண் என்பது, பிறவித் தொடர் நம்பிக்கையாளர் கருத்து. உழுவ லன்பைப் "பயிலியது கெழீஇய நட்பு" என்பர் இறையனார் (குறுந். 2). ஊழால் ஏற்பட்ட ஆவலை உழுவல் என்றனர். இதைத் தெய்வப் புணர்ச்சி யென்றும், இயற்கைப் புணர்ச்சி யென்றும், நூல்கள் கூறும். |