நிலச்சார்பு கடந்ததாகலின், தெய்வத்தால் நேர்ந்ததாக விதந்து கூறப்பெறும். காதலன் களவுக் காலத்தில் தன் காதலியை நோக்கி, உலக முழுவதையும் பெற்றாலும் நான் உன்னைக் கைவிடேன் என்று (குறுந்.300) உறுதி கூறியதற்கு ஏற்ப, கற்புக் காலத்தில், நீ தொட்டது நஞ்சாயிருந்தாலும் எனக்குத் தேவர் அமுதமாகும் (தொல், கற் பியல்,5) என்றும், நீ எனக்கு வேப்பங்காயைத் தந்தாலும் அது தீஞ்சுவைக் கற்கண்டுபோல் இனிக்கும் (குறுந்.166)என்றும், உன் கூந்தலைப்போல் நறுமணமுள்ள மலரை நான் உலகில் எங்குங் கண்டதில்லை யென்றும் (குறுந்.2) பலபடப் பாராட்டி அவளை மேன்மேலும் ஊக்கி இன்புறுத்துவது வழக்கம். காதல் மனைவியும் , தன் கணவனைத் தெய்வம்போற் பேணி, அவன் இட்ட சூளை (ஆணையை) நிறைவேற்றாவிடத்து அதனால் அவனுக்குத் தீங்கு நேராதவாறு தெய்வத்தை வேண்டிக்கொள் வதும், அவன் சூள் தப்பவில்லை யென்பதும் (குறுந்.87), தன் தலைவன் குற்றத்தைப் பிறர் எடுத்துரைப்பின் அதை மறுத்து அவனைப் புகழ்வதும் (குறுந் 3), தன் கணவனும் தானும் ஒருங்கே இறக்க வேண்டுமென்று விரும்புவதும் (குறுந்.57) வழக்கம். அரசரும் மறவரும் போர் செய்தற்கும், முனிவரும் புலவரும் தூதுபற்றியும், வணிகர் பொருளீட்டற்கும், வேற்றூரும் வேற்று நாடும் செல்ல நேரின், அவர் திரும்பி வரும்வரை அவர் மனைவியர் ஆற்றியிருப்பதும், சுவரிற் கோடிட்டு நாளெண்ணி வருவதும், அவர் குறித்த காலத்தில் வராவிடின் விரைந்து வருமாறு தெய்வத்தை வேண்டுவதும், இயல்பாம். கணவனுக்குக் கற்புடை மனைவியும், பெற்றோருக்கு அறிவுடை மக்களும், சிறந்த பேறாகக் கருதப்பட்டனர். "என்னொடு பொருதும் என்ப அவரை ஆரமர் அலறத் தாக்கித் தேரொடு அவர்ப்புறங் காணே னாயின் சிறந்த பேரமர் உண்கண் இவளினும் பிரிக" (பதிற்.88) என்று பூதப்பாண்டியன் வஞ்சினங் கூறுதலும், "சேணாறு நல்லிசைச் சேயிழை கணவ" என்று, குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறையும், "செயிர்தீர் கற்பிற் சேயிழை கணவ" என்று (புறம்.3), பாண்டி யன் கருங்கை யொள்வாட் பெரும்பெயர் வழுதியும், பாராட்டப் பெறுதலும் காண்க. "பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மையுண் டாகப் பெறின்." (குறள். 54) என்றார் திருவள்ளுவர். |