இனி மக்கட் பேறுபற்றி, "படைப்புப்பல படைத்துப் பலரோ டுண்ணும் உடைப்பெருஞ் செல்வ ராயினும் இடைப்படக் குறுகுறு நடந்து சிறுகை நீட்டி இட்டுந் தொட்டுங் கவ்வியுந் துழந்தும் நெய்யுடை யடிசில் மெய்பட விதிர்த்தும் மயக்குறு மக்களை யில்லோர்க்குப் பயக்குறை யில்லைத்தாம் வாழும் நாளே" (புறம்.188) என்று பாண்டியன் அறிவுடை நம்பியும். "பொன்னுடைய ரேனும் புகழுடைய ரேனுமற் றென்னுடைய ரேனும் உடையரோ - இன்னடிசில் புக்களையும் தாமரைக்கைப் பூநாறும் செய்யவாய் மக்களையீங் கில்லா தவர்" (நளவெண்பா, கலிதொடர்.68) என்று புகழேந்திப் புலவரும். "பொறுமவற்றுள் யாமறிந்த தில்லை யறிவறிந்த மக்கட்பே றல்ல பிற" (குறள்.61) என்று திருவள்ளுவரும், கூறியிருத்தல் காண்க. பெண் மக்களால் பல தொல்லைகள் நேர்வதால் ஆண்பிள்ளையையே தமிழர் சிறப்பாக விரும்பினர். "சாண்பிள்ளை ஆண்பிள்ளை மாண்பிள்ளை" "பெண்ணைப் பெற்றவன் பேச்சுக் கேட்பான்" என்பன பழமொழிகள். கணவன் தவற்றாலோ மனைவியின் பேதைமையாலோ, சில சமையங்களில் அவரிடைப் பிணக்கு நேர்வதுண்டு. அன்று மனைவி ஊடிக் கணவனொடு பேசாதிருப்பாள். ஊடுதல் சடைவுகொள்ளுதல். அது கணவனால் எளிதாய்த் தீர்க்கப்படும். அது சற்றுக் கடுமையானால் புலவி எனப்படும். அது குழந்தையைக் கணவன் எடுத்துக்கொண்டு போய்க் கொடுப்பதனாலும், வீட்டிற்கு விருந்தினர் வந்திருப்பதாலும், உறவினரும் நண்பரும் தலையிடுவதாலும், தீர்க்கப்படும். புலவி முற்றிவிட்டால் துனி எனப்படும். அதை ஒருவராலும் தீர்க்க முடியாது. நீண்ட நாட் சென்று அது தானே தணியும். பழகப் பழகப் பாலும் புளிப்பதுபோல், கணவன் மனைவியரிடைப்பட்ட காமவின்பம் சற்றுச் சுவை குறையும்போது அதை நிறைத்தற்குப் புலவியும் வேண்டு மென்றும், அது உணவிற்கு உப்பிடுவது போன்றதென்றும், ஊடல் உப்புக் குறைவதும் துனி உப்பு மிகுவதும் போன்றவையென்றும், உப்பு மிகையாற் சுவை கெடுவதுபோல் துனியால் இன்பங் கெடுமாதலால் அந் நிலையை அடையாதவாறு புலவியைத் தடுத்துவிட வேண்டுமென்றும், திருவள்ளுவர் கூறுவர். |