தளரியல் என்னும் பெயர்கள் இலக்கியத்தில் ஏற்பட்டுள்ளன. தீயோரால் அவர்க்கும் அவருறவினர்க்கும் சேதமும் மானக்கேடும் நேரா வண்ணமே, அவர் துணையோடன்றி வெளியே அனுப்பப் படுவதில்லை. ஆடவர் நான்முழ வேட்டியுடுக்கும் போது, பெண்டிர் பதினெண் முழச் சேலை யணிவதும், இக் கரணியம்பற்றியே. ஆகவே, பெண்டிரை வெளிவிடாதிருப்பது, அவருடைய நலம் பேணலேயன்றி அவரைச் சிறைப்படுத்தலாகாது. கடைகட்கும் கோயிற்கும் திருவிழாவிற்கும் உறவினர் வீட்டு மங்கல அமங்கல நிகழ்ச்சிகட்கும் பிற இடங்கட்கும், துணையொடு போய் வர அவர்க்கு நிரம்ப வாய்ப்புண்டு. பூப்படைந்த கன்னிப் பெண்களையும் தக்க துணையின்றி வெளியே விடுவதில்லை. கணவன், பொருளீட்டல்பற்றியோ தீயொழுக்கம்பற்றியோ பிரிந்திருக்கும்போது, கற்புடை மனைவி தன்னை அணி செய்து கொள்வதில்லை; மங்கலவணி தவிர மற்றவற்றை யெல்லாம் கழற்றி விடுவாள். "அஞ்செஞ் சீறடி அணிசிலம் பொழிய மென்துகில் அல்குல் மேகலை நீங்கக் கொங்கை முன்றிற் குங்குமம் எழுதாள் மங்கல அணியிற் பிறிதணி மகிழாள் கொடுங்குழை துறந்து வடிந்துவீழ் காதினள் திங்கள் வாண்முகம் சிறுவியர் பிரியச் செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் மறப்பப் பவள வாணுதல் திலகம் இழப்பத் தவள வாணகை கோவலன் இழப்ப மையிருங் கூந்தல் நெய்யணி மறப்பக் கையறு நெஞ்சத்துக் கண்ணகி" (சிலப்.4:47-57) என்று, இளங்கோவடிகள் கூறுதல் காண்க. இனி, அக்காலத்தில், இல்வாழ்க்கைக்குரிய அறங்களையும் செய்வதில்லை. "அறவோர்க் களித்தலும் அந்தண ரோம்பலும் துறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை." (சிலப்.16:71-73) என்று, கண்ணகி மதுரையில் தன் கணவனை நோக்கிக் கூறுதல் காண்க. மறுமுகம் பாராத கற்பென்பது கணவன் மனைவி யிருவருக் கும் பொதுவேனும், பூதப்பாண்டியன் போன்ற ஒருசிலரே அவ் வறத்தைக் கடைப்பிடித்த ஆடவராவர்; பெண்டிரோ பற்பல்லா |