எ-டு: எள்(இளை) - எய்; கொள் - கொய்; சேழ் (சேள்) - சேய் -சேய்மை; தொள் - தொய், நெள்(நள்) - நெய்; பள் - (பய்) - பயம்பு; பொள் - பொய்; வெள் - வெய் - வெய்ம்மை - வெம்மை வேண்டல் (தொல்.சொல்.334). "அகரத் திம்பர் யகரப் புள்ளியும் ஐயென் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்" (56) என்னும் தொல்காப்பிய மொழிநெறிப்படி, அய் என்பது ஐயாகும். ஒ. நோ: வள் - (வய்) - வை = கூர்மை. பொள் - பொய் - (பய்) - பை = உட்டுளையுள்ளது. இந் நெறிமுறைகளின்படி, அள் - (அய்)ஐ என்றாகும். ஐ = பெருமை, பெரியோன், தந்தை, ஆசிரியன், தலைவன், அரசன், கணவன். இப் பொருள்கட்கெல்லாம் அடிப்படை பெரியோன் என்பதே. இனி "ஐவியப் பாகும்" (தொல், 868) என்பதால், ஐ = வியக்கத் தக்க பெருமையுடையோன் என்றுமாம். ஐயள் = வியக்கத்தக்கவள் (ஐங். 255). ஒரே சொல் பண்புப் பெயராகவும் பண்பாகு பெயராகவு மிருப்பதை அடிமை, அண்ணல், செம்மல் என்னும் சொற்களாலும் அறிக. அடிமை = அடிமைத் தன்மை, அடியான். அண்ணல் = பெருமை, பெரியோன். செம்மல் = 1, தலைமை. "அருந்தொழில் முடித்த செம்மற் காலை" (தொல். பொருள்,146) 2. தலைவன். "அறவோன் மகனே மறவோர் செம்மால்!" (புறம். 366) ஐ - ஐயன் = பெரியோன், தந்தை, அண்ணன், தலைவன், அரசன், ஆசிரியன், முனிவன், அடிகள், இறையடியான், தெய்வம், கடவுள். உறவினரல்லாத மூத்தோரையும் உயர்ந்தோரையும் ஐயா என்று விளிப்பதே தொன்றுதொட்ட தமிழ் மரபு. இது ஆரியர் இந்தியாவிற்கு வருமுன்னும் ஆரிய இனமே உலகத்தில் தோன்று முன்னும், பழம் பாண்டிநாடும் தமிழன் பிறந்தகமுமான குமரிக் கண்டத்தில் தோன்றிய வழக்காகும். ஐயா என்பது ஐயன் என்பதன் விளிவேற்றுமை. காதலும் மதிப்பும்பற்றி, உறவினரும் அல்லாருமான இளை யோரையும் ஐயா என்று விளிப்பது மரபு வழுவமைதியாம். |