பக்கம் எண் :

பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்69

  இனி, இறைவனடியாரும் பெரியோராதலாலும், நாயனார் என்றும் தேவர் என்றும் பெயர் பெற்றிருத்தலாலும், துறவியர்போல் இறைவன் பற்றுடைமையாலும், ஐயர் என்னும் பெயருக்குரியர்.

   "சார்வலைத் தொடக்கறுக்க ஏகும் ஐயர்" என்று, கண்ணப்ப நாயனார் புராணத்தில் (70) அந் நாயனாரையும், "ஐயரே! அம்பலவர் அருளாலிப் பொழுதணைந்தோம்" என்று, திருநாளைப்போவார் நாயனார் புராணத்தில் (30) அந் நாயனாரையும்; "அளவிலா மகிழ்ச்சி யினார் தமைநோக்கி ஐயர்நீர்" என்று, திருஞானசம்பந்த நாயனார் புராணத்தில் (133) திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனாரையும்; உயர்வுப்பன்மை வடிவில் ஐயர் என்று சேக்கிழார் குறித்திருத்தல் காண்க.

   மக்களினும் உயர்ந்த வகுப்பார் தேவராதலின், ஐயன் என்னும் சொல் தேவன் என்றும் கடவுள் என்றும் பொருள்படும். தேவன் என்னும் பொருளில் அது சாத்தனையும், கடவுள் என்னும் பொரு ளில் சிவனையும் குறிக்கும். சாத்தனை ஐயனார் என்பது மரபு.

   இல்லறத்தாருள் ஒருவனுக்கு அரசன், ஆசிரியன், தந்தை, தாய், தமையன் என்று ஐவகைப் பெரியோரிருப்பதால், அவர் ஐங்குரவர் என்றும்; அவருட் சிறந்த பெற்றோரிருவரும் இருமுதுகுரவர் என்றும் அழைக்கப்பெறுவர். குரவன் பெரியோன்.

   தந்தையைக் குறிக்கும் ஆயான், ஆஞான் என்னும் முறைப் பெயர்களும், ஐயன் என்பதன் திரிபாகவே தோன்றுகின்றன. ஆயான் = தந்தை, அண்ணன். ஆயான் - ஆஞான் = தந்தை. ஒ.நோ: வலையன் - வலைஞன்.

   ஐயன் என்னும் சொல், மாகதி என்னும் பிராகிருதச் சிதைவான பாலிமொழியில் அய்ய என்று திரியும்.

   ஐ என்னும் தந்தை முறைப் பெயரினின்றே ஆய் என்னும் தாய் முறைப்பெயர் திரியும்.

ஐ - ஆய் = அன்னை.
எம் + ஆய் = யாய் (எம் அன்னை)
உம் + ஆய் = மோய் - மொய் (உம் அன்னை)
நம் + ஆய் = (நாய்) - ஞாய் (நம் அன்னை)
தம் + ஆய் - தாய் (தம் அன்னை, அன்னை)

  அன்னையைக் குறித்த அவ்வை என்னும் சொற்போன்றே, ஆய் என்னும் சொல்லும் பாட்டியைக் குறிக்கும். இது ஆயாள் என்றும் வழங்கும்.

  அம்மை - அவ்வை = அன்னை, பாட்டி.