பக்கம் எண் :

70பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்

   அப்பாய் (அப்பனைப் பெற்ற பாட்டி), அம்மாய் (அம்மை யைப் பெற்ற பாட்டி) என்னும் முறைப்பெயர்களில், ஆய் என்பது அன்னையைக் குறித்தல் காண்க.

   அன்னையைக் குறிக்கும் மாயி, மா என்னும் இந்திச் சொற்கள், மோய் என்னும் தென்சொல்லின் திரிபே. மோய் - மாய் - மாயி, மா. வடநாட்டுப் பழந் திரவிடமாகிய திரிமொழியே பிராகிருதமென்றும், சூரசேனிப் பிராகிருத வழிவந்த சிதைமொழியே இந்தியென்றும் அறிக.

   நாய் என்னும் வடிவம் ஒரு விலங்கையும் குறித்தலால், அம் மயக்கை நீக்குதற்கு ஞாய் எனத் திரிந்தது. தலைவி எம் ஆய் என்னும் பொருளில் யாய் என்றும், தோழி நம் ஆய் என்னும் பொருளில் ஞாய் என்றும், நற்றாயைக் குறித்தலை 7ஆம் முல்லைக் கலியுட் காண்க.    

   "யாயும் ஞாயும் யாரா கியரோ" என்னும் குறுந்தொகை யடியில் (40:1) வரும் ‘ஞாயும்’ என்னும் சொல், மோயும் என்றிருந் திருத்தல் வேண்டும். இத்தகைய மரபுவழுக்கள் கடைக்கழகக் காலத்திலேயே தோன்றிவிட்டன.

   தாய் என்னும் பெயர் தன் முன்னொட்டுப் பொருளிழந்து வழங்குவது, தமப்பன், தமையன், தமக்கை, தவ்வை, தங்கை முதலிய சொல்வழக்குப் போன்றது. தமப்பன் - தகப்பன். தம் அவ்வை - தவ்வை. அப்பன் பெயர் அண்ணனையும் குறித்ததுபோல், அம்மை பெயர் அக்கையையும் குறித்தது.

   ஐயன் என்பதன் பெண்பால் ஐயை. ஐயை = தலைவி, ஆசிரியை, ஆசிரியன் மனைவி, துறவினி, காளி, சிவை (மலைமகள்). காளியை அம்மையென்றும், அவ்வை (கொற்றவை) யென்றும், கூறுதலை நோக்குக.

   தாய், அரசி முதலிய பிற பொருள்களைக் காட்டும் இலக்கியம் இறந்துபட்டது.

   பிராமணர் தென்னாட்டிற்கு (தமிழகத்திற்கு) வந்தபின், அவருள் இல்லறத்தார் பார்ப்பாரென்றும், துறவியர் போன்றவர் ஐயர் அல்லது அந்தணர் என்றும் அழைக்கப்பெற்றனர். நாளடை வில் எல்லாப் பிராமணரும் அந்தணர் என்பதைக் குலப் பெயராக வும், ஐயர் என்பதைப் பட்டப் பெயராகவும் கொண்டு விட்டனர். ஐயர் அவர்கள் என்று பொருள்படும் ஐயரவர் என்பது, தெலுங் கில் ஐயவாரு என்றும் ஐயகாரு என்றும் திரிந்தது. ஐயகாரு - ஐயங்கார்.