பக்கம் எண் :

பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்71

   பிராமணரைப் பின்பற்றி, வீரசைவரும் சௌராட்டிரர் என்னும் பட்டுநூற்காரரும் ஐயர் என்பதைக் குலப்பட்டப் பெயராக மேற்கொண்டுள்ளனர்.

   சமயக் குரவர் என்னும் பொருளில், கிறித்தவக் குருமாரும் ஐயர் என அழைக்கப்பெற்றனர்.

   இங்ஙனம் ஐயன், ஐயை என்னும் சொற்கள், குமரிநாட்டுக் காலத்தினின்றே ஐம்பதினாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்திருக்கும் தூய தென்சொல்லாயிருப்பவும், அவற்றை முறையே ஆர்ய, ஆர்யா என்னும் (ஆரிய இனத்தைக் குறிக்கும்) இருபாற் பெயரினின்று தோன்றியிருப்பதாகச் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகரமுதலியிற் குறித்திருப்பது, பிராமணரின் குறும்புத் தனத்தையும், தலைமைப் பதவி தாங்கும் தமிழ்ப் பேராசிரியரின் அறியாமையையும் அடிமைத்தனத்தையும், எத்துணைத் தெளி வாகக் காட்டுகின்றது!

   முனிவரான ஐயர் அந்தணர் என்றும் பெயர் பெறுவர்; பெரும்பாலும் ஆடையின்றி யிருப்பர்.

   அந்தணர் என்பது, எல்லா வுயிர்களிடத்தும் அழகிய குளிர்ந்த அருளையுடையவராய் முற்றத் துறந்த முனிவரைக் குறிக்கும் சொல்; ஒரு குலத்திற்கோ ஓர் ஆரிய வகுப்பிற்கோ உரிய பெயரன்று.


"அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்"
(குறள். 30)


என்று திருவள்ளுவர் நீத்தார் பெருமை என்னும் அதிகாரத்திற் கூறுதல் காண்க. நீத்தார் - துறந்தோர்.

"இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன்" (கலித். 38)

என்பது சிவனைக் குறித்தது.

"நூலே கரகம் முக்கோல் மணையே
ஆயுங் காலை அந்தணர்க் குரிய"
(71)

என்று தொல்காப்பிய மரபியலிற் கூறியிருப்பது, தமிழ்மரபிற்கு முற்றும் மாறாகும். இது ஆரியர் தமிழ்நாட்டிற்கு வந்தபின் ஏற்பட்ட கருத்தே.

"மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்க
லுற்றார்க் குடம்பும் மிகை"
(345)

என்னும் குறளை நோக்கி உண்மை தெளிக. முனிவரிடம் உடம்பன்றி வேறொன்று மிராது.

   பண்டாரம் என்னும் சொல்லும் தென்சொல்லே.