பண்டாரம் களஞ்சியம். பல நூல்களைக் கற்ற பண்டிதன் ஓர்அறிவுக் களஞ்சியம் போலிருப்பதால், உவமையாகு பெயராய்ப் பண்டாரம் எனப்பட்டான். "திருக்காளத்தி ஞானக் களஞ்சியமே" என்று இராமலிங்க அடிகள் இறைவனை விளித்தலையும் (அருட்பா, 1. விண்ணப்ப. 255), ஆங்கிலத்திலும் ஒரு பேரறிஞனை repository of curious information என்று கூறும் வழக்கையும், கூர்ந்து நோக்குக. வண்ணம் பாடுவதிற் சிறந்த பாவலனை வண்ணக் களஞ்சியம் என்று கூறுதலும் காண்க. பண்டம் பொருள். பண்டம்+ஆரம் = பண்டாரம். ஒ. நோ: வட்டம்+ஆரம் = வட்டாரம். ஆரம் என்பது ஓர் இடப்பொருளீறு. வடமொழியார், இயற்பொருளில் வரும்போது பண்டாரம் என்னும் சொல்லைப் பாண்டார (bhandara) என்றும், ஆகுபெயர்ப் பொருளில் வரும்போது அச் சொல்லைப் பிண்டார என்றும்,வேறுபடுத்தியும் வேர்ப்பொரு ளின்றியும் காட்டுவர். சித்தர் மலையிலிருப்பவ ராயினும், எங்கும் இயங்குபவர். அவர் அறிவர் என்றும் சொல்லப்படுவர். சித்து அறிவு. "மறுவில் செய்தி மூவகைக் காலமும் நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும்" (புறம். 20) என்று தொல்காப்பியம் கூறுவது சித்தரைப் பற்றியே. செத்தல் = கருதுதல், கருதியறிதல், அறிதல். செத்து = கருதி (இ. கா. வி. எ.). "அரவுநீ ருணல்செத்து" (கலித். 45) செ - செத்து (தொழிற்பெயர்) = கருத்து, அறிவு. ஒ.நோ : ஒ - ஒத்து = 1. இ. கா. வி. எ. 2. தொழிற்பெயர். செத்து - சித்து. ஒ. நோ : செந்துரம் - சிந்துரம். சித்து என்னும் தென்சொல்லும் சித்தி (siddhi) என்னும் வடசொல்லும் வெவ்வேறாம். சித்து அறிவு; சித்தி கைகூடுதல். சித்தன் ஆற்றல் சித்து எனப்படும். அதைச் சித்தி என்பது தவறு. சித்து விளையாடுதல் என்னும் உலக வழக்கை நோக்குக. தமிழ் இலக்கண மருத்துவ முதனூல்களை இயற்றியவர் முனிவரும் சித்தருமே. "வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதனூ லாகும்." (தொல். மரபு. 95) |