பக்கம் எண் :

பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்73

   தமிழ் மருத்துவம் சித்த மருத்துவம் எனப்படும். பொன்னாக்க மும் (இரசவாதமும்) சித்தர் கலையே.

   கிறித்துவிற்குப் பிற்பட்ட சித்தருள் பதினெண்மர் பெயர் பெற்றவர். அவர் அறிவுப் பாடல்களைப் பதினெண் சித்தர் ஞானக் கோவையிற் காணலாம்.

   சித்தரும் முனிவரும் ஒரோவொரு சமையம் நாட்டிற்கும் வந்து செல்வதாகச் சொல்லப்படுவர்.

   ஆசை, செருக்கு, அறிவு மயக்கம் என்னும் மூன்றும் அடி யோடு நீங்கப்பெறுவதே, துறவறத்தின் பழுத்த நிலையாம்.

"காம வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமங் கெடக்கெடும் நோய்."
(குறள். 360)

என்றார் திருவள்ளுவர்.

   துவராடை யணிந்த பின்பும் தன்னைப் பிறப்பில் உயர்ந்த வனாகக் கருதும் ஆரியனுக்கு, இம் மூன்றும், சிறப்பாக நான் என்னும் செருக்கு, நீங்கப் பெறுவது, முடவன் மரமேறிக் கொம்புத் தேனைக் குடிப்பதே யாம்.

   தமிழர் இல்லறத்தில் வெற்றி கண்டது போன்றே துறவறத்தி லும், அருளுடைமை, புலான் மறுத்தல், கள்ளாமை, வாய்மை, வெகுளாமை, இன்னாசெய்யாமை, கொல்லாமை, அவாவறுத்தல் என்னும் அறுவகை யறங்களையும்; நோன்பு (தவம்), மெய்யுணர்தல் (ஓகம்) என்னும் இருவகை வழிகளையும், கடைப்பிடித்து வெற்றி கண்டனர்.

   தமிழத் துறவியருள் தலைசிறந்தவர் சித்தர். அவர் வான்வழி இயங்குதல், கூடுவிட்டுக் கூடு பாய்தல், தோன்றி மறைதல், மண்ணுள் இருத்தல், உண்ணாது வாழ்தல் முதலிய பல ஆற்றல்களை அடைந்தவர். திருமூலர் ஒரு சித்தர். பட்டினத்தாரும் இராமலிங்க அடிகளும், இறுதியில் சித்தநிலை அடைந்ததாக அவர் வரலாறு கூறும்.

   நோன்பு (தவம்) என்பது இல்லறத்தார்க்கும் துறவறத்தார்க்கும் பொதுவாம்.

9. சமயவொழுக்கம்

   
சமயம் என்பது மதம். அது ஒருவகைச் சமைவைக் குறித்தலால் சமயம் எனப்பட்டது. சமைதல் நுகர்ச்சிக்குப் பதமாதல். அரிசி சோறாகச் சமைவது உண்பதற்குப் பதமாதல். பெண்பிள்ளை மங்கையாகச் சமைவது மண நுகர்ச்சிக்குப் பதமாதல். ஆதன் (ஆன்மா) இறையடிமையாகச் சமைவது, வீடுபேற்றிற்கு அல்லது இறைவன் திருவடிகளை யடைவற்குப் பதமாதல்.