சமையம் என்பது வேளையைக் குறிக்கும்போதும், ஒரு வினைக்குப் பதமான அல்லது தக்க காலநிலை என்னும் பொருளதே. நல்ல சமையம், தக்க சமையம், ஏற்ற சமையம் என்னும் வழக்குகளை நோக்குக. பலவகைச் சமைவுகளுள்ளும் ஆதன் இறையடி மையாகச் சமைவது தலைசிறந்ததாதலால், சமைவு என்னும் வினை, அதனையே சிறப்பாகக் குறிக்கும். ஆயினும், பொருள்மயக்க மில்லாவாறு, சோறு சமைவது சமையல் என்றும், பெண் சமைவது சமைதல் என்றும், நேரம் சமைவது சமையம் என்றும், ஆதன் சமைவது சமயம் என்றும், வேறுபடுத்திச் சொல்லப் பெறும். சமையம் என்னும் சொல் அமையம் என்னும் சொல்லின் முதன்மிகை (prothesis) . அமைதல் பொருந்துதல் அல்லது தகுதி யாதல். நல்லதொன்று வாய்ப்பின், அமைந்துவிட்டது என்பர். அமையும் நேரம் அமையம். உயிர்முதற் சொற்கள் சொன்முதல் மெய்களுள் ஒன்றும் பலவும் பெற்றுச் சொற்களைப் பிறப்பித்தல், சொல்லாக்க நெறிமுறைமையாம். எ-டு : உருள் - சுருள், ஏண் - சேண். அமை என்னும் முதனிலையும் அம் என்னும் வேரினின்று திரிந்ததாகும். இதனால், சமயம் என்னும் சொல் தூய தென்சொல் லாதல் தெளிக. அது வடசொல்லென்று வடமொழிச் சொற்களஞ் சியங்களிலும் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகரமுதலி யிலும் குறித்திருப்பது கொண்டு மயங்கற்க. ஆரியர் வருமுன்பே, தமிழர் சமயத் துறையிலும் தலை சிறந்திருந்தனர். ஆயினும், எல்லாரும் அந் நிலையடையவில்லை. எந்த நாகரிக நாட்டிலும், தலையாயார், இடையாயார், கடையாயார் என்னும் முத்திறத்தார் இருக்கவே செய்வர். ஆகவே, தமிழர் மதமும், சிறுதெய்வ வணக்கம், பெருந் தெய்வ வழிபாடு, கடவுள்நெறி என முந்நிலைப் பட்டிருந்தது. சிறுதெய்வங்கள் (1) தென்புலத்தார் (இறந்த முன்னோர்). (2) நடுகல் தெய்வங்கள். (3) பேய்கள் (பேய், பூதம், முனி, சடைமுனி, அணங்கு (மோகினி), சூரரமகளிர் முதலியன). (4) தீய வுயிரிகள் (பாம்பு, சுறா, முதலை முதலியன). (5) இடத் தெய்வங்கள் (ஆற்றுத்தெய்வம், மலைத்தெய்வம், காட்டுத்தெய்வம், நகர்த்தெய்வம், நாட்டுத்தெய்வம்). |