பக்கம் எண் :

பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்75

(6) இயற்கைப் பூதங்கள் (காற்றும் தீயும்).
(7) வானச் சுடர்கள் (கதிரவனும் திங்களும்).
(8) செல்வத் தெய்வம் (திருமகள்).
(9) கல்வித் தெய்வம் (நாமகள் அல்லது சொன்மகள்).
(10) பால்வரை தெய்வம் (ஊழ் வகுப்பது).

பெருந்தெய்வங்கள்

இவை ஐந்திணைத் தெய்வங்களாகும்.
குறிஞ்சி - சேயோன்.
முல்லை - மாயோன்.
பாலை - காளி.
மருதம் - வேந்தன்.
நெய்தல் - வாரணன்.

   சேயோன் சிவந்தவன். சேந்தன் என்னும் பெயரும் அப் பொருளதே. முருகன், வேலன், குமரன் என்னும் பெயர்களும் இவனுக்குண்டு. சிவன் என்பது சேயோன் என்பதன் உலக வழக்கு வடிவம். இப் பெயர் வடிவு வேறுபாட்டைக் கொண்டு, பிற் காலத்தில் ஆரியர் ஒரே தெய்வத்தை இரண்டாக்கித் தந்தையும் மகனுமாகக் கூறி விட்டனர். குமரன் என்பதற்கும் சேய் என்னும் குறுக்கத்திற்கும் மகன் என்று தவறாகப் பொருள் கொண்டதே இதற்கு அடிப்படை.
 
   சிவன் என்று ஆரியத் தெய்வம் ஒன்றுமில்லை. சிவ என்னும் சொல், நல்ல அல்லது மங்கல என்னும் பொருளில், உருத்திரனுக்கும் இந்திரனுக்கும் அக்கினிக்கும் பொதுவான அடைமொழியாகவே ஆரிய வேதத்தில் வழங்கிற்று.

   புறக்கண் காண முடியாதவற்றையும் நெடுந்தொலைவிலுள்ள வற்றையும் கண்டறியும் ஓர் அறிவுக்கண் போன்ற உறுப்பு, குமரி நாட்டு மக்கள் நெற்றியிலிருந்ததென்றும், அதனாலேயே அவர்தம் இறைவனுக்கும் (சிவனுக்கும்) ஒரு நெற்றிக்கண்ணைப் படைத்துக் கூறினரென்றும், ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். வெள்ளிமலை (கைலை)யிருக்கையும் காளையூர்தியும் சிவனைக் குறிஞ்சிநிலத் தெய்வமாகக் காட்டுவது கவனிக்கத்தக்கது.

   வரகுண பாண்டியனின் தலைமையமைச்சரும் பிராமணரும் சிறந்த சிவனடியாரும் வடமொழி தென்மொழி வல்லுநருமாகிய மாணிக்கவாசகர்,