பக்கம் எண் :

76பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்

   குறிஞ்சிநிலத்தார் தம் தெய்வத்தை மலையில் தோன்றும் நெருப்பின் கூறாகவும், முல்லைநிலத்தார் தம் தெய்வத்தை வானத்தினின்று பொழியும் முகிலின் கூறாகவும் கொண்டனர். இதனாலேயே, சிவனுக்குத் தீவண்ணன், அந்திவண்ணன், மாணிக்கக் கூத்தன் என்னும் பெயர்களும்; திருமாலுக்குக் கார்வண்ணன், மணிவண்ணன் என்னும் பெயர்களும்; தோன்றின.

   காளி கருப்பி. கள் - கள்வன் = கரியவன். கள் - காள் - காழ் = கருமை. காள் - காளம் = கருமை. காள் - காளி. காளி கூளிகட்குத் தலைவி. கூளி பேய். பேய் கருப்பென்றும் இருள் என்றும் பெயர் பெறும். கருப்பி, கருப்பாய் என்னும் காளியின் பெயர்களை, இன்றும் பெண்டிர்க்கிடுவது பெருவழக்கு. தாய் என்னும் பொருளில் அம்மை (அம்மன்), ஐயை என்றும், இளைஞை என்னும் பொருளில் கன்னி, குமரி என்றும், வெற்றி தருபவள் என்னும் பொருளில் கொற்றவை (கொற்றவ்வை) என்றும், காளிக்குப் பெயர்கள் வழங்கும். அங்காளம்மை என்பது அழகிய காளியம்மை என்னும் பொருளது.

   ஆரியர் வருமுன் வடஇந்தியா முழுதும் திரவிடர் பரவியிருந்ததினால், வங்கநாட்டில் காளிக்கோட்டம் ஏற்பட்டது.

   வேந்தன் = அரசன். முதற்காலத்தில் அரசனும் தெய்வமாக வணங்கப்பட்டான். அதனால், இறைவன் என்னும் பெயர் அரசனுக் கும் கடவுட்கும், கோயில் என்னும் பெயர் அரண்மனைக்கும் தெய்வக் கோட்டத்திற்கும் பொதுவாயின. வேந்தன் இறந்தபின் வானவர்க்கும் அரசனாகி வானுலகத்தினின்று மழையைப் பொழி விக்கின்றான் என்று பண்டை மருதநில மக்கள் கருதியதால், மழைத் தெய்வத்தை வேந்தன் என்னும் பெயரால் வணங்கி வந்தனர்.

   ஆரியர் வருமுன்பே, மொழி வேறுபாட்டினால் வேந்தனுக்கு வடநாட்டில் வழங்கி வந்த பெயர் இந்திரன் என்பது. இந்திரன் அரசன். ஆகவே இரண்டும் ஒருபொருட் சொற்களே. வேத ஆரியர் இந்திர வணக்கத்தை, வடநாட்டுத் திரவிடரைப் பின்பற்றியே மேற்கொண்டிருத்தல் வேண்டும். மேலையாரிய நாடுகளில் இந்திர வணக்கமே யிருந்ததில்லையென்று, மாகசு முல்லர்
(Max Muller) கூறியிருப்பது, இங்குக் கவனிக்கத்தக்கது.

   கடைக்கழகக் காலம் வரை காவிரிப்பூம்பட்டினத்தில் நடைபெற்று வந்த இந்திர விழாவும், தமிழர் வேந்தன் விழாவே.

  வாரணன் = கடல் தெய்வம். வாரணம் கடல். கடலுக்கு ஒரு தெய்வமிருப்பதாகக் கருதி, அதை நெய்தல்நில மக்கள் வணங்கி வந்தனர்.