"பாண்டி நாடே பழம்பதி யாகவும்" (திருவாச.2 : 118) "தென்னா டுடைய சிவனே போற்றி" (திருவாச.4 : 164) என்று பாண்டிநாட்டையே சிவநெறிப் பிறப்பிடமாகக் குறித்தல் காண்க. இனி, சிவபெருமான் அறுபத்து நான்கு திருவிளையாடல் களையும் மதுரையில் அருளிச் செய்ததையும், முத்தொழில் அல்லது ஐந்தொழில் திருநடத்தைத் தில்லையில் ஆற்றுவதையும், எண் மறச் செயல்கள் செய்த இடங்கள் (அட்டவீரட்டம்) தமிழ்நாட்டிலிருப்பதையும், ஊன்றி நோக்குக. மாயோன் கரியவன், மா கருப்பு. மாய கிருஷ்ணன் என்னும் பெயர்க்கும் இதற்கும் யாதொரு தொடர்புமில்லை. கண்ணபிரான் பிறக்கு முன்பே, கிருஷ்ண என்னும் சொல் கருப்பு என்னும் பொருளின் இருக்கும் வேதத்தில் வழங்கிற்று. கிருஷ்ண பக்ஷ (கரும்பக்கம்) கிருஷ்ண ஸர்ப்ப (கரும்பாம்பு) என்னும் பெயர்களை நோக்குக. கிருஷ்ண என்னும் சொற்கு வேத மொழியில் வேரில்லை; தமிழிலேயே உள்ளது. கள் - கரு - கருள் = 1. கருமை. "கருள்தரு கண்டத்து......கைலையார்" (தேவா. 337: 4) 2. இருள் (பிங்.). 3. குற்றம். "கருள் தீர்வலியால்" (சேதுபு. முத்தீர்த். 5). கருள் = க்ருஷ். ளகர மெய்யீறு வேதமொழியில் ஷகர மெய்யீறாகத் திரியும். எ-டு : சுள் - சுஷ் (to dry) . உள் - உஷ், (to burn) . மாயோன், மால், விண்டு என்னும் பெயர்கள் ஒரு பொருட் சொற்கள். மால் = கருமை, முகில், திருமால். விண்டு = முகில், வானம், திருமால். விண் = வானம், முகில், மேலுலகம். விண் - விண்டு. ஆரிய வேதத்தில் விஷ்ணு என்னும் பெயர் கதிரவனைக் குறித்தது. காலை எழுச்சியையும் நண்பகற் செலவையும் எற்பாட்டு (சாயுங்கால) வீழ்ச்சியையுமே மூவடியால் (மூன்று எட்டால்) உலக முழுவதையும் விஷ்ணு (கதிரவன்) அளப்பதாக முதலிற் கொண் டனர் வேத ஆரியர். |