முதற்காலத் திரவிடர் வடமேற்காய்ச் சென்று கிரேக்க நாட்டிற் குடியேறியபின், வாரணம் என்னும் சொல் (ouranos) எனத் திரிந்தது. அப் பெயர்த் தெய்வம் முதலிற் கிரேக்கர்க்குக் கடல்தெய்வமாகவே யிருந்து, பின்பு, வானத்தெய்வ மாயிற்று. கிரேக்கத்திற்கு மிக நெருங்கிய மொழியைப் பேசிவந்த கீழையாரியருள் ஒரு பிரிவாரான வேத ஆரியர், கடலையறியாமல் நெடுகவும் நிலவழியாகவே வந்ததினால், மழைத்தெய்வத்தையே வருணா என அழைத்தனர். அவர் இந்தியாவிற்குட் புகுந்து வடநாட்டுத் திரவிடரோடும் தென்னாட்டுத் தமிழரோடும் தொடர்புகொண்ட பின்னரே, வருணனைக் கடல் தெய்வமாகக் கருதத் தொடங்கினர். ஆயினும், இன்னும் மழைக்காக வருணனை வேண்டுவதே பிராமணர் வழக்கமா யிருந்து வருகின்றது. தொல்காப்பியத்தில் "வருணன் மேய பெருமண லுலகமும்" (அகத். 5) என்று, வாரணன் என்னும் பெயரை வடமொழி வடிவிற் குறித்திருப்பது தவறாகும். அது "வாரணன் மேய ஏர்மண லுலகமும்" என்றிருந்திருத்தல் வேண்டும். ஐந்திணைத் தெய்வ வழிபாடுகளுள், சேயோன் வழிபாடும் மாயோன் வழிபாடும் பிற்காலத்தில் இருபெருஞ் சமயங்களாக வளர்ச்சி யடைந்துள்ளன. ஐந்திணைத் தெய்வங்களும் தமிழ்த் தெய்வங்களே யென்றும், பிற்காலத்தில் ஆரியர் அவற்றைப்பற்றிப் பல்வேறு கதைகள் (புராணங்கள்) கட்டிவிட்டனர் என்றும், என் தமிழர் மதம் என்னும் நூலில் விரிவாய் விளக்கப் பெறும். கடவுள் நெறி ஊர்பேர் குணங்குறியற்று, மனமொழி மெய்களைக் கடந்து எங்கும் நிறைந்திருத்தல், எல்லாம் அறிந்திருத்தல், எல்லாம் வல்லதாதல், என்று முண்மை, அருள்வடிவுடைமை, இன்பநிலை நிற்றல், ஒப்புயர்வின்மை, மாசுமறுவின்மை ஆகிய எண்குணங்களையுடையதாய் எல்லாவுலகங்களையும் படைத்துக் காத்தழித்து வரும் ஒரு பரம் பொருளுண்டென்று நம்பி, அதனை வழிபடுவதே கடவுள் நெறியாம். இது சித்தமதம் எனவும் படும். எல்லாவற்றையும் கடந்திருப்பதனாலேயே இறைவனுக்குக் கடவுள் எனப் பெயரிட்டனர். ஆரியர் வந்தபின், இச்சொல் முதலிற் பெருந்தெய்வங்கட்கும், பின்பு சிறுதெய்வங்கட்கும், இறுதியில் மக்களான முனிவர்க்கும் வழங்கி இழிவடைந்துள்ளது. திருவள்ளுவர் தம் நூன்முகத்திற் கூறியிருப்பது உருவமற்ற கடவுள் வழுத்தே. தமிழரின் உருவவணக்கமல்லாக் கடவுள் வழி |