| காடு என்றும் பகுத்தனர். குறிஞ்சியிலும் முல்லையிலுமுள்ள விளை நிலங்கள் கொல்லை அல்லது புனம் என்றும், மருதநிலத்திலுள்ள விளைநிலங்கள் செய் என்றும், புதுக் கொல்லை இதை என்றும், பழங் கொல்லை முதை என்றும், சிறிது செய்யப் பெற்ற செய் புன்செய் என்றும், நன்றாய்ச் செய்யப் பெற்ற செய் நன்செய் என்றும் பெயர் பெற்றன. செய்தல் என்பது திருத்துதல் அல்லது பண்படுத்துதல். புன்மை சிறுமை. கொல்லை என்பது வானாவாரிக் காடென்றும், புன்செய் கிணற்றுப் பாய்ச்சலென்றும், நன்செய் ஆற்று அல்லது ஏரிப் பாய்ச்சலென்றும் அறிதல் வேண்டும். எள், கொள் முதலியன கொல்லைப் பயிர்; கேழ்வரகு, சோளம் முதலியன புன்செய்ப் பயிர்; நெல், கரும்பு முதலியன நன்செய்ப் பயிர். நன்செய்களுள், பழமையானது பழனம் என்றும், போரடிக் கும் களமுள்ளது கழனி என்றும் சொல்லப் பெறும். பண்ணை என்பது பண்ணப்பட்டது (பண்படுத்தப்பட்டது) என்னும் பொரு ளதேனும், வழக்கில் களமர் அல்லது செறுமர் என்னும் பண்ணை யாள்கள் குடியிருந்து வேலை செய்யும் பெரிய வயற்பரப்பையே (farm) குறிக்கும். சேறுள்ளமையால் செறு என்றும், வைப்புப் போன்றமையால் வயல் என்றும், நன்செய்க்குப் பெயர்களுண்டு. புனமாயினும் புன்செயாயினும், பண்டைத்தமிழர் மேட்டு நிலத்திற் பயிர்செய்ய விரும்பவில்லை. மேடு சுவல் என்றும் பள்ளம் அவல் என்றும் பெயர் பெறும். "மேட்டுப் புன்செயை உழுதவனும் கெட்டான், மேனி மினுக்கியை மணந்தவனும் கெட்டான்" என்பது பழமொழி. நன்செய்ப் பாசனத்திற்கு, ஆற்றுநீர் இல்லாவிடங்கட்குக் கண்ணாறுகளும் கால்வாய்களும் வெட்டிப் பாய்ச்சினர். அது இயலாவிடத்து ஏரிகளை வெட்டினர். ஏர்த்தொழிற்கு உதவுவது ஏரி. குளிப்பது குளம். இன்று ஏரியைத் தவறாகக் குளமென்பர் ஒரு சாரார். இயற்கையாக உண்டான ஏரி அல்லது குளம் பொய்கை எனப்படும். முல்லைநிலத்திற் புன்செய்ப் பாசனத்திற்குக் கிணறு களை வெட்டினர். எருதுகளைக் கொண்டு கிணற்றுநீரை இறைக்கும் ஏற்றம் கம்மாலை எனப்பட்டது. அம் = நீர், அம் - கம் = நீர். கம் + ஆலை = கம்மாலை. ஆலை சுற்றி வருவது. கரும்பாலை என்பதை நோக்குக. ஆலுதல் ஆடுதல். முதற்காலத்தில் எருதுகள் ஒரு மரத்தூணைச் சுற்றி வந்தன. கம்மாலையென்பது இன்று கமலை என்றும் கவலை என்றும் திரிந்து வழங்குகின்றது. இன்றும் கமலையாடுதல் என்னும் வழக்கை நோக்குக. இன்று எருதுகள் நேராகச் செல்வதால் கவலை |