| யோட்டுதல் என்றும் கூறுவர். கமலை யேற்றத்தைக் கபிலை யேற்றம் என்று சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகரமுதலி குறித்திருப் பது தவறாகும். கபிலை (வ.) யென்பது குரால் என்னும் ஆவகை. ஆவைக் கட்டி நீரிறைப்பது வழக்கத்திற்கு மாறாகும். விதைக்கென்று முதற் காய்ப்பையும் சிறந்த மணிகளையும் ஒதுக்கி வைத்தனர். அக்காலத்து உழவர் பொருளீட்டலைக் குறிக் கொள்ளாது, உணவு விளைத்தலையே குறிக்கொண்டு பதினெண் கூலங்களையும் அவற்றின் வகைகளையும், ஆண்டுதோறும் விளைத்து வந்தனர். நூற்றுக்கணக்கான நெல்வகைகள் விளைக்கப் பெற்றன. அவற்றுட் பெரும்பாலனவற்றை இன்று கண்ணாலும் காண முடியவில்லை; காதாலும் கேட்க முடியவில்லை. பொன் தினை, செந்தினை, கருந்தினை என்னும் மூவகையுள், இன்று பொன்றினையே காண முடிகின்றது. அவரைவகைகளுட் பல ஆண்டு தோறும் ஒவ்வொன்றாய் மறைந்து வருகின்றன. இன்று ஆட்சியை நடத்துபவருக்குப் பதவியைக் காக்க வேண்டு மென்பதேயன்றி, விதை வகைகளைப் பேணவேண்டு மென்னும் கலை நோக்கில்லை. தமிழகத்தில் உழவுத்தொழிற்கு இன்றியமையாத் துணையாக, தொன்றுதொட்டுப் பயன்பட்டுவரும் விலங்கு எருதாகும், ஏர்த் தொழிற்கு உதவுவதனால் காளை எருதெனப் பட்டது. ஏர் - ஏர்து-எருது. காட்டுமாட்டைப் பிடித்துப் பழக்கி வீட்டு விலங்காக்கி ஏர்த்தொழிற்குப் பயன்படுத்தினர். எருதின் இன்றியமையாமை நோக்கியே ஏர்த் தொழிலைப் பகடு என்றனர். "பகடு புறந்தருநர் பாரம் ஒம்பி" (புறம். 35) "பகடு நடந்த கூழ்" (நாலடி. 4) உழவுத்தொழிலும் பாண்டியம் எனப்பட்டது. "பாண்டியஞ் செய்வான் பொருளினும்" (கலித்.136) பாண்டி எருது. எருதுகளை நிறம் பற்றியும் திறம்பற்றியும் பலவகையாக வகுத்து, அவற்றுள் நால்வகையைச் சிறப்பாக இறக்க வரிசையில் எடுத்துக் கூறினர். அது "முழுப் புல்லை, முக்கால் மயிலை, அரைச் சிவப்பு. கால் கருப்பு;" எனப் பழமொழியாய் வழங்கி வருகின்றது. பண்டையுழவர் எல்லாப் பயிர் பச்சைகளையும் பருவமறிந்தே விளைத்து வந்தனர். ("சித்திரைமாத வுழவு பத்தரை மாற்றுத் தங்கம்," "பட்டந்தப்பினால் நட்டம்," "ஆடிப்பட்டம் தேடி விதை" என்பன பிற்காலத்துப் பழமொழிகளாகும்.) மாரிக்கால வேளாண்மையைக் |