கல் (தோண்டு) - L. colere, to till. கல் என்னும் வினையினின்று கல்வி என்னும் சொல் தோன்றியது போன்றே, colo என்னும் வினையினின்று cultivation, culture என்னும் சொற்களும், ar (உழு) என்னும் வினையினின்று ars, artis (art) என்னும் சொற்களும் தோன்றியுள்ளன. உலக முதற் கல்வியும் உழவே. புல்லம் (எருது) ME. bole, ON. boli, MLG., MDu. bulle. E.bull. "புல்ல மேறி தன்பூம் புகலியை" (தேவா. 76:11) (2) நெசவு நெய் - நெயவு = நெசவு. ஆடை நெசவைப் பற்றிய செய்திகளெல்லாம் முன்பு கூறப்பட்டன. "மடத்தகை மாமயில் பனிக்குமென் றருளிப் படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசைக் கடாஅ யானைக் கலிமான் பேக." (புறம். 145) என்று பரணர் பாடியிருப்பதாலும், "புதையிருட் படாஅம் போக நீக்கி" (5:4) என்னும் சிலப்பதிகார அடிக்கு, "அல்லற்காலைப் பசந்துவாரப் பனித்துப் போர்த்த இருளாகிய படாத்தை" என்று அடியார்க்கு நல்லார் உரை வரைந்திருப்பதனாலும். "பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும் கட்டும் நுண்வினைக் காருகரிருக்கையும்" (சிலப்.5:16-1) என்பதால், மயிர்நெசவும் கடைக்கழகக் காலத்திருந் தமை அறியப்படுவதாலும், படாம் என்பது சால்வை (shawl) என்னும் பாரசீகச் சொல்லாற் குறிக்கப்பெறும் மென்மயிர்ப் போர்வையா யிருக்கலாம். "கண்டங் குத்திய மண்டப எழினியும்" (உஞ்சைக். 37 : 103) "கழிப்பட மாடம் காலொடு துளங்க" (உஞ்சைக். 44 : 42) என்னும் பெருங்கதை யடிகளும் பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதியென்னும் பெயரும் கொண்டு, கூடாரம் அமைத்தற்குரிய முரட்டுத் துணியும் நெய்யப்பட்டமையை உய்த் துணரலாம். திரையால் அமைக்கப்பட்ட மண்டபம் மண்டப எழினி. படம் - துணி, மாடம் - மாடம்போல் உயர்ந்த கூடம். படமாடத்தைப் படமாளிகை, படமண்டபம் என்பதுமுண்டு. |