பக்கம் எண் :

பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்85

தொழிற்பெயரும், செய், பண்ணை என்னும் நிலப்பெயரும் இதனை வலியுறுத்தும்.

   தொள் - (தொளில்) - தொழில். தொள்ளுதல் தோண்டுதல்.
   கை = கையாற் செய்யும் செய்கை அல்லது தொழில், முதல் தொழிலான உழவு.

"இரவார் இரப்பார்க்கொன் றீவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர்"
(1035)

என்னும் திருக்குறளை நோக்குக.

   கை என்பது செய்கையைக் குறித்தலாலேயே ஒரு தொழிற் பெயரீறாயிற்று. எ - டு: செய்கை, வருகை.

   உழவு முதல் தொழிலானதினால் கம்மம், கமம் என்னும் இருவடிவும் முதலில் உழவைக் குறித்தன.

கம்மவாரு (தெ.) - கம்மவார் = தெலுங்க வுழவர்.
கம்மத்தம் - கம்மத்தமு (தெ.) பண்ணைப் பயிர்த்தொழில்.
கமம் = பயிர்த்தொழில். கமக்காரன் = உழவன்.
கமம் - கம் = 1. தொழில்.
"ஈமும் கம்மும் உருமென் கிளவியும்" (தொல். எழுத்து. 328)
2. கம்மியத் தொழில் (நன். 223, விருத்தி)

   கம்ஆளன் கம்மாளன். கம்மாளர் என்பார் கொல்லன், தச்சன், கம்மியன் (சிற்பி), தட்டான், கன்னான் என்னும் ஐங்கொல்லர். கம்மியனைக் கல்தச்சன் என்று கூறுவது வழக்கம்.

கம் - கம்மியம் = 1. கைத்தொழில்.
2. கம்மாளத் தொழில்.
கம்மாளன் என்னும் சொற்போன்றே, கம்மியன் என்னும் சொல்லும் பிற கொல்லரையும் குறிக்கும்.
கம்மியன் = 1. கைத்தொழில்.
"கம்மியரும் ஊர்வர் களிறு" (சீவக.495)
2. கம்மாளன் (தி.வா.).
3. பொற்கொல்லன்.
"ஆசில் கம்மியன் மாசறப் புனைந்த" (புறம்.353)
கம்மியநூல் = கட்டடநூல் (சிற்ப சாத்திரம்)