"கம்மியநூல் தொல்வரம் பெல்லை கண்டு" (திருவிளை. திருநகரங். 38) கருமகன் என்பது, "கருங்கைக் கொல்லர்" (சிலப். 5: 29) என்பதுபோல் இருப்புக் கொல்லனை மட்டும் குறிக்கும். கருமகன் - கருமான். ஒ.நோ: பெருமகன் - பெருமான், மருமகன் - மருமான். கரு என்னும் வினைமுதனிலை வடமொழியில் க்ரு எனத் திரியும். கரணம் என்பதைக் காரண என நீட்டியும், க்ரு என்னும் முதனிலையினின்று கார்ய என்னும் சொல்லை ஆக்கியும், கருமம் என்பதைக் கர்மன் எனத் திரித்தும், உள்ளனர் வடமொழியாளர். "மின்னும் பின்னும் பன்னும் கன்னும் அந்நாற் சொல்லும் தொழிற்பெயரியல." (எழுத். 345) என்னும் தொல்காப்பிய நூற்பாவில் கன்னாரத் தொழில் குறிக்கப் பட்டுள்ளது. தொல்காப்பியர் பாரதக் காலத்திற்கும் கடைக்கழகக் காலத்திற்கும் இடைப் பட்டவர்; பாணினிக்கு முந்தியவர். "நெல்லும் செல்லும் கொல்லும் சொல்லும் அல்லது கிளப்பினும் வேற்றுமை யியல" (தொல்.எழுத்து. 371) என்பதில் கொல்லத் தொழில் குறிக்கப்பட்டுளது. "நடைநவில் புரவியும் களிறும் தேரும் ......................................... தெரிவுகொள் செங்கோல் அரசர்க் குரிய" (தொல். மரபு. 72) என்பது, அரசன் ஏறிச்செல்லும் தேரையும், "தேரோர் தோற்றிய வென்றியும்" (தொல். புறத். 21) என்பது தேர்ப் படையையும் குறித்தன. "உலைக்கல் லன்ன பாறை யேறி" (குறுந். 12: 1) "பெருங்கை யானைக் கொடுந்தொடி படுக்கும் கருங்கைக் கொல்லன் இருப்புவிசைத் தெறிந்த கூடத் திண்ணிசை வெரீஇ" (பெரும்பாண். 436-8) "நல்ல பெருந்தோ ளோயே கொல்லன் எறிபொற் பிதிரின் சிறுபல் காய வேங்கை வீயுகும்" (நற். 13 : 5-7) "வன்புல மிறந்த பின்றை மென்றோல் மிதியுலைக் கொல்லன் முறிகொடிற் றன்ன கவைத்தான் அலவன்" (பெரும்பாண். 206-8) |